Dec 23, 2012

சிறந்த பொக்கிஷம்.


மனிதர்கள் தங்கம் வெள்ளியை சேர்த்து வைத்திருந்தால் நீங்களும் பின்வரும் வார்த்தைகளை பொக்கிஷங்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்!
அவை:
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الثَّبَاتَ فِي الْأَمْرِ ، وأَلَعَزِيمَةَعلي الرُّشْدِ 
 وَأَسْأَلُكَ شُكْرَ نِعْمَتِكَ ، وَحُسْنَ عِبَادَتِكَ ، وَأَسْأَلُكَ َقَلْبًا سَلِيمًا ولِسَانًا صَادِقًا ، وَأَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا تَعْلَمُ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا تَعْلَمُ ، وَأَسْتَغْفِرُكَ مِمَّا تَعْلَمُ وَ أَنْتَ عَلَّامُ الْغُيُوبِ
யா அல்லாஹ்!எல்லா காரியங்களிலும் குழப்பமில்லாத உறுதியையும்,நேர்வழியின் மீது பிடிப்பையும் உன்னிடம் வேண்டுகிறேன்,உனது அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தும் தன்மையையும்,உன்னை அழகிய முறையில் வணங்கும் நற்பாக்கியத்தையும் உன்னிடம் வேண்டுகிறேன்,நல்ல[எண்ணமுடைய]உள்ளத்தையும்,உண்மைமையான நாவையும் உன்னிடம் கேட்கிறேன்,மேலும் நீ எதை நல்லதென்று நினைக்கிறாயோ அதை உன்னிடம் தேடுகிறேன்,நீ எதை தீமை எனக்கருதுகிறாயோ அதை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்,[எனது பட்டியலில் எதை பாவமாக]நீ அறிந்துள்ளவற்றிலிருந்தும் பாவமன்னிப்பு தேடுகிறேன்,மேலும் நீ மறைவானவற்றை மிக நன்கு அறிந்தவனாக இருக்கிறாய்.

Dec 17, 2012

உலகம் அழியப்போகிறதாம்,அப்படியா?


சிறிய அடையாளங்கள்
அமானிதங்கள் தன் இலாபப் பொருளாக கருதப்படும்,
ஜகாத் [ஏழை வரி]கடனாக நினைக்கப்படும்,

மகளின் தயவில் தாய் வாழுதல்.
பின் தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல் 
குடிசைகள் கோபுரமாகும்
மது பல பெயர் சொல்லி அழைக்கப் படும்,
விபச்சாரமும்  மதுப்பழக்கமும் பெருகும்   
தகுதியற்றவர்களிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்படும்.  
பாலை வனம் சோலை வனமாகும்.
காலம் சுருங்குதல்
கொலைகள் பெருகுதல்
நில அதிர்வுகளும் பூகம்பங்களும் அதிகரித்தல்  
பள்ளிவாசல்களை வைத்து பெருமையடிப்பது
பள்ளிகளில் கூச்சல்கள் அதிகமாகுதல்.
நெருக்கமான கடை வீதிகள் உண்டாகி விடுதல்.
பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல்
ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருத்தல்.
உயிரற்ற பொருட்கள் பேசுதல்
பேச்சைத் தொழிலாக்கி பொருள் திரட்டுதல்.
தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுதல்.
பள்ளிவாசலை பாதைகளாகப் பயன்படுத்துதல்.
சாவதற்கு ஆசைப்படுதல்.
இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள் உருவாக்கி விடுதல்.
முந்தைய சமுதாயத்தைக் காப்பியடித்தல் 
பின்னவர்கள் முன்னவர்களை ஏசுதல்.
பெற்றோரை ஒதுக்கி,நண்பர்களை சேர்த்துக் கொள்வது,
ஆடல் அழகிகள் அதிகமாகுதல்.
இசை பெருகி விடுதல்,இன்னும் பல அடையாளங்கள் சிறியவை அனைத்தும் அநேகமாக நிகழ்ந்து விட்டன,
மேலும் பெரிய அடையாளங்கள் பல உள்ளன அவற்றில் முக்கியமானவற்றை மட்டும் இங்கு சொள்ளப்படுக்றது,அவை:
தஜ்ஜாலின் வருகை
தஜ்ஜாலின் வருகை பற்றி எல்லா இறைதூதர்களும் எச்சரித்துள்ளனர்.  அவன் ஒற்றைக்கண்ணன்.உங்களின் இறைவன் ஒற்றக்கண்ணன் அல்லன்.அவனது இரு கண்களுக்கிடையேகாஃபிர்-இறைமறுப்பாளன்என எழுதப்பட்டிருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,தஜ்ஜாலின் ஒரு கண் திராட்சைபோன்று சுருங்கி இருக்கும்,அவன் வெள்ளை நிறத்தவனாக இருப்பான்.அவன் உடல் கவர்ச்சியாக இருக்கும்.
சற்று குண்டாக இருப்பான், பின்புறத்திலிருந்து நோக்கினால் அவனது தலைமுடி சுரு் சுருளாக இருக்கும்,பரந்த நெற்றியுடையவனாக இருப்பான். குள்ளமானவனாகவும், கால்கள் இடைவெளி அதிகமுள்ளவனாகவும் இருப்பான்.
அவனின் ஒரு கண் ஊனம்.மறுகண் பச்சை நிறக்கல் போலிருக்கும் என்பது தான் அவனது தோற்றத்தில் வித்தியாசமானவை ஆகும். இவையே தஜ்ஜால் பற்றிய சரியான அறிமுகம் ஆகும். இவை தவிர அவன் பற்றி கற்பனையாகக் கூறப்படுபவை யாவும் பொய்யான தகவல்கள் ஆகும்.
தஜ்ஜால் எல்லா ஊர்களுக்கும் சென்று தனது மாயா ஜாலங்களால் மக்களை வழிகெடுப்பான்.
அவன் நாற்பது நாட்கள் பூமியில் வாழ்வான்.அனைத்து இடற்களுக்கும் செல்வான். ஆனால் மஸ்ஜிதுல் ஹராம், மதீனா பள்ளி வாசல்,தூர் மஸ்ஜித், பைத்துல் முகத்தஸ் ஆகிய நான்கு பள்ளிவாசல்களையும் அவனால் நெருங்க முடியாது.
தஜ்ஜாலின் குழப்பங்களிலிருந்து தங்களையும் காப்பாற்றி, ஈமானையும் பாதுகாத்திட நபி(ஸல்) இரு வழிகளைக் கற்றுத் தந்துள்ளார்கள்.   
அவன் சிரியா செல்லும் வழியில் நபி ஈஸா(அலை) அவர்களால் கொல்லப்படுவான். அதன் பின் ஈஸா(அலை) அவர்கள் இந்த பூமியில் நாற்பது ஆண்டுகள் நேர்மையான தலைவராக இருந்து மக்களை வழிநடத்துவார்கள் என நபி (ஜல்) அவர்கள் கூறினார்கள்.
ஈஸா[அலைஹிஸ்ஸலாம்]வருகை.
ஈஸா[அலை]அவர்கள் கியாமத் நாளின் அடையாளமாக திகழ்கிறார்கள் என்பதை நபி (ஸல்) அவர்கள் மிகவும் அழகாக நமக்கு விளக்கியுள்ளனர்.
    'எனது உயிர் எவனது கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! மர்யமுடைய மகன் உங்களிடம் நீதி செலுத்துபவராக, தீர்ப்பு வழங்குபவராக இறங்குவார். சிலுவையை முறிப்பார். பன்றியைக் கொல்வார். ஜிஸ்யா வரியை நீக்குவார். வாங்குவதற்கு யாருமில்லாத அளவுக்கு செல்வம் கொழிக்கும்' என்பது நபிமொழி.
போட்டி, பொறாமை, கபடம் ஆகியவை எடுபட்டுப் போகும்'அவர் இறங்கக் கூடிய காலத்தில் இஸ்லாத்தை தவிர எல்லா மதங்களையும் அல்லாஹ் அழிப்பான்'
    தஜ்ஜாலின் கொடுமை தலைவிரித்தாடும் போது தான் ஈஸா (அலை) இறங்குவார்கள்.
    தஜ்ஜாலின் நிலை இவ்வாறு இருக்கும் போது மர்யமின் மகன் மஸீஹை அல்லாஹ் அனுப்புவான். டமாஸ்கஸ் நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள வெள்ளை மனாரா(கோபுரம்)வுக்கருகில் அவர் இறங்குவார். இரண்டு வானவர்களின் சிறகுகள் மீது தன் கைகளை வைத்தவராக இறங்குவார். அவர் தலை குனிந்தால் தலையில் நீர் சொட்டும். தலையை உயர்த்தினால் முத்துப் போல் தண்ணீர் சிதறும்! அவரது மூச்சுக்காற்று அவரது பார்வையில் எட்டும் தூரம் வரை செல்லும். மூச்சுக் காற்று படுகின்ற எந்தக் காபிரும் சாகாமல் இருப்பதில்லை. பின்னர் தஜ்ஜாலைத் தேடுவார்கள். 'லுத்' (பைத்துல் முகத்தஸின் அருகிலுள்ள ஊர்) எனும் வாசலில் வைத்து அவனைக் கொல்வார்கள் என்றும் நபி (ஸல்) கூறியுள்ளார்கள,
    ஈஸா (அலை) மரணித்து சில காலத்தில் யுகமுடிவு நாள் வந்து விடும் எனவும் நபி (ஸல்) கூறியுள்ளனர்.
யுகமுடிவு நாளின் மிக நெருக்கத்தில் ஏற்படவுள்ள நிகழ்ச்சிகளில் ஈஸா (அலை) அவர்களின் வருகையும் ஒன்றாகும் என்பதை முஸ்லிம்கள் நம்பியாக வேண்டும்.                                                                   
யஃஜூஜ் மஃஜூஜ்.
உலகம் அழியக்கூடிய காலம் நெருங்கும் போது ஏற்படும் பத்து அடையாளங்களில் யஃஜுஜ், மஃஜுஜ் எனும் கூட்டத்தினரின் வருகையும் ஒன்றாகும். இக்கூட்டத்தினர் பற்றி திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் பல விபரங்கள் கூறப்பட்டுள்ளன.

இந்தக் கூட்டத்தினர் இனி மேல் தான் பிறந்து வருவார்கள் என்பதி
ல்லை. நீண்ட காலமாகவே அவர்கள் இருந்து வருகின்றனர். அவர்கள் மலைகளால் சூழப்பட்ட பகுதியில் வசிக்கின்றனர். அவர்கள் எந்த நாட்டில் இவ்வாறு அடைக்கப்பட்டுள்ளனர் என்பதை அல்லாஹ்வும், அவனது தூதரும் நமக்குக் கூறவில்லை. யுகமுடிவு நாளின் நெருக்கத்தில் அவர்கள் வெளிப்பட வேண்டுமானால் மற்ற மனிதர்கள் அவர்களை அறிந்து கொள்ளாமலிருப்பது அவசியம். அதற்காகக் கூட இறைவன் மறைத்து வைத்திருக்கலாம்.


அவர்களின் முகங்கள் கேடயம் போல் அகன்றதாகவும், (வட்டமாகவும்) கண்கள் சிறியதாகவும், முடிகள் செம்பட்டையாகவும் அமைந்திருப்பார்கள். அம்மலைகளுக்கிடையே இரும்புப் பாளங்களை அடுக்கி செம்பு உருக்கி ஊற்றப்பட்டுள்ளது. அதைத் தாண்டி வரவும் முடியாது. அதைக் குடைந்து வெளியே வரவும் முடியாது. யுக முடிவு நாளின் நெருக்கத்தில் அந்தத் தடை உடைக்கப்பட்டு அவர்கள் வெளிப்பட்டு வருவார்கள். ஒருவருடன் ஒருவர் முட்டி மோதிக் கொள்ளும் அளவுக்கு அவர்களின் எண்ணிக்கை பெருமளவில் இருக்கும் என்று 18:94-96 வரயிலான வசனங்கள் கூறுகின்றன.

யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் ஆதம் (அலை) அவர்களின் சந்ததிகளாவர். அவர்கள் விடுவிக்கப்பட்டால் மக்களின் வாழ்க்கையைப் பாழாக்குவார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் அல்லது அதற்கும் அதிகமான சந்ததிகளை உருவாக்காமல் மரணிப் பதில்லை.உங்களில் ஒருவர் என்றால் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் ஆயிரம் என்ற கணக்கில் நரகவாசிகளின் எண்ணிக்கை இருக்கும் என்று நபி(ஸல்) கூறினார்கள்.
அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் விரைந்து வருவார்கள். அவர்களில் முதலில் வருபவர்கள் தபரிய்யா என்ற ஏரியில் தண்ணீரைக் குடிப்பார்கள். பின்னால் வருபவர்களுக்குத் தண்ணீர் இருக்காது. அந்த நேரத்தில் ஈஸா நபியவர்களும், அவர்களின் தோழர்களும் இக்கூட்டத்தினால் முற்றுகையிடப்படுவார்கள்.
உலகையே கைப்பற்றி விட்டோம் என்ற மமதையில் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் பைத்துல் முகத்தஸ் பகுதியில் உள்ள மலையில் ஏறுவார்கள். பூமியில் உள்ளவர்களை நாம் கொன்று விட்டோம். வாருங்கள் வானத்தில் உள்ளவர்களைக் கொல்வோம் என்று அவர்கள் கூறு வார்கள். தங்கள் அம்புகளை வானத்தை நோக்கி எய்வார்கள். அவர்களின் அம்புகளை ரத்தத்தில் தோய்த்து அல்லாஹ் திருப்பி அனுப்புவான்,இதை பார்த்து அவர்கள் வானையும் பிடித்து விட்டோம் துள்ளி குதிப்பார்கள்.
ஈஸா[அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முஸ்லிம்களோடு தூர்சீனா மழையில் இருப்பார்கள் அங்கு இவர்கள் செல்ல முடியாது,, அன்று ஒரு மாட்டின் தலை இன்றைய நூறு தங்கக் காசுகளுக்குச் சமமாகத் தோன்றும் அளவுக்கு முற்றுகை நீடிக்கும். ஈஸா நபியவர்கள் அல்லாஹ்விடம் இறைஞ்சுவார்கள். ஒரேயடியாக யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் செத்து விழுவார்கள். பின்னர் ஈஸா நபியவர்களும், அவர்களின் தோழர்களும் தூர் மலையிலிருந்து கீழே இறங்குவார்கள். ஒரு ஜான் இடம் கூட மிச்சமில்லாமல் அவர்களின் உடல் பூமி முழுவதும் சிதறி நாற்றமெடுக்கும். அப்போது ஈஸா நபியவர்கள் மீண்டும் அல்லாஹ்விடம் இறைஞ்சுவார்கள்.

அப்போது அல்லாஹ் ஒட்டகத்தின் கழுத்தைப் போன்ற பறவைகளை அனுப்புவான். அவை உடல்களைத் தூக்கிச் சென்று வீசி எறியும். பின்னர் அல்லாஹ் மழையைப் பொழிவிப்பான். கூடாரமோ, மண் வீடுகளோ எதையும் விட்டு வைக்காமல் அவற்றின் மேல் மழை பொழியும். பூமியைக் கண்ணாடி போல் சுத்தமாக்கும்.

"
பூமியே உனது பழங்களை முளைக்கச் செய்! உனது அபிவிருத்தியைத் திரும்பக் கொடு''என்று (இறைவனால்) பூமிக்குக் கட்டளை பிறப்பிக்கப்படும். அந்நாளில் ஒரு மாதுளையை ஒரு பெரும் கூட்டம் சாப்பிடும். அதன் தோல்களில் ஒரு கூட்டம் நிழல் பெறுவார்கள். பாலில் பரகத் செய்யப்படும். ஒரு ஒட்டகத்தில் கறக்கும் பால் ஒரு பெரும் கூட்டத்துக்குப் போதுமானதாக இருக்கும். ஒரு மாட்டில் கறக்கப்படும் பால் ஒரு கோத்திரத்துக்குப் போதுமானதாக ஆகும். ஒரு ஆட்டில் கறக்கப்படும் பால் ஒரு குடும்பத்துக்குப் போதுமானதாக அமையும். இவர்கள் இவ்வாறு இருக்கும் போது தூய்மையான காற்றை அல்லாஹ் அனுப்புவான். அனைத்து முஸ்லிம்களின் உயிர்களையும் அது கைப்பற்றும். மிகவும் கெட்டவர்கள் மட்டுமே மிஞ்சுவார்கள்.அல்லாஹ் என்று சொல்பவர்கள் ஒருவரும் இருக்கமாட்டார்கள், அப்போதுதான் சூரியன் மேற்கில் உதயமாகும் அதன் பிறகு ஈமான் கொள்பவர்களின் ஈமான் ஏற்றுக்கொள்ளப்படாது
என்று நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள்.

Oct 20, 2012

நபியின் அன்பு.

அன்னை ஆயிஷா[ரழி]அவர்கள் அறிவிக்கிறார்கள்:
ஒரு முறை அன்பு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்ட நான் "அல்லாஹ்வின் தூதரே!எனக்காக அல்லாஹ்விடம் துஆச்செய்யுங்கள்"என வேண்டினேன்.உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்

"யாஅல்லாஹ்!ஆயிஷாவின் முன் பின் பாவங்களையும் மான்னித்து விடுவாயாக! மேலும் அவர் மறைமுகமாக பகிரங்கமாகச்செய்த பாவங்களையும் மன்னிப்பாயாக! என்று துஆ செய்தார்கள்.

இந்த துஆவைக் கேட்டதும் எனது தலை எனது மடியில் போய் முட்டும் அளவுக்கு எனக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று," 

இதனைக்கண்ட நபி [ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்]அவர்கள் "ஆயிஷா!எனது துஆவினால் இவ்வளவு மகிழ்ச்சியா?"என்று வினவினார்கள்.யாரஸூலல்லாஹ்!தங்களின் துஆவினால் நான் எப்படி மகிழ்ச்சியடையாமல் இருக்க முடியும்?என நான் கூறினேன்.

அன்பு மயமான அருள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்:
ஆயிஷா! அல்லாஹ்வின் மீது ஆணையாக இந்த துஆவை எனது சமுதாயத்[உம்மத்]துக்காகஒவ்வொரு தொழுகையிலும் நான் வேண்டிக்கொண்டிருக்கிறேன்.
                         ஆதாரம்:அல்பஸ்ஸார்,மஜ்மவுஸ்ஸவாயித்

கேளுங்கள்!தரப்படும்.


பிரார்த்தனை (துஆ)
2:186   وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ  ۖ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ  ۖ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ
2:186(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக.
அல்லாஹ் இதன் மூலம் தான் தன் அடியார்களின் அனைத்து வேண்டுதல்களையும் கேட்டு நிறை வேற்றுவதாக வாக்களிக்கிறான்,ஆனால் நாமோ அல்லாஹ்விடம் துஆ செய்வதற்கு யோசிக்கிறோம்,
மர்யம்[அலை]அவர்களை தன் பொறுப்பில் வைத்து வளர்த்து வந்த இறைத்தூதர் ஜகரிய்யா[அலை]அவர்கள் ஒருமுறை அன்னை மர்யமை காண செல்கிறார்கள் அங்கு சென்ற அன்னாருக்கு ஆச்சரியம் காரணம் அங்கு பல வகை கனிவகைகள் இருகின்றன,ஆனால் அந்த பழங்கள் அந்த பகுதியில் அந்த காலத்தில் கிடைப்பது அறிதாகும்.
ஆச்சரியப்பட்ட நபியவர்கள் MARYAMA  
3:38   هُنَالِكَ دَعَا زَكَرِيَّا رَبَّهُ  ۖ قَالَ رَبِّ هَبْ لِي مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً  ۖ إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ
3:38அந்த இடத்திலேயே ஜகரிய்யா தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தவராகக் கூறினார் “இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்.”

காது கொடுக்காதே!

சாக்ரடீஸிடம் ஒருவர் ஓடோடி வந்து சொன்னார். "சாக்ரடீஸ் இதைக் கேள்விப்பட்டீர்களா?"
வந்தவர் மற்றவர்களைப் பற்றிய புரளிகளிலும், வதந்திகளிலும் மிகுந்த ஈடுபாடுடையவர். சாக்ரடீஸ் அவரை மேலே பேச விடாமல் நிறுத்தி கேட்டார். "ஐயா நீங்கள் சொல்ல வரும் விஷயம் முற்றிலும் உண்மை என்று உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா?"
அவர் பேச்சில் ஆரம்பித்தில் இருந்த வேகம் குறைந்தது. "இல்லை...."
"நீங்கள் சொல்லப் போவது எனக்கோ சமூகத்திற்கோ மிகவும் உபயோகப்படக்கூடிய விஷயமா?"
"அதில்லை..."
"இதைத் தெரிந்து கொள்ளாவிட்டால் எனக்கோ சமூகத்திற்கோ ஏதேனும் நஷ்டம் உண்டா?"
"இல்லை"
"இதைச் சொல்வதில் உங்களுக்காவது நற்பயன் ஏற்படுமா?"
"அப்படிச் சொல்ல முடியாது....." அவர் குரல் ஈனசுரத்தில் வந்தது.

"ஐயா, எதை உண்மையென்று உறுதியாகக் கூற முடியாதோ, எதனால் நமக்கோ, சமூகத்திற்கோ பயனுமில்லையோ, எதை அறிந்து கொள்ளாததால் நமக்கு நஷ்டமுமில்லையோ அதைத் தெரிந்துகொள்ள நான் விரும்பவில்லை. குறுகிய வாழ்க்கையில் தெரிந்து கொள்ளவும் பேசவும் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அதில் நம் கவனம் செலுத்தலாமே" என்று
சாக்ரடீஸ் சொல்ல, வந்தவர் அசடு வழிய அங்கிருந்து நகர்ந்தார்.
மற்றவர்களைப் பற்றிய விஷயங்கள் நம்மிடம் சொல்லப்படும் போது நம்மில் எத்தனை பேர் சாக்ரடீசின் மனோபாவத்தில் இருக்கிறோம்? கேட்கும் விஷயங்கள் உண்மையா என்பதை அறிய நாம் உண்மையில் முயல்கிறோமா? நமக்கோ மற்றவர்களுக்கோ பயன்படும் விஷயங்களாக அவை இருக்கின்றனவா என்று சல்லடையிட்டு தேர்ந்தெடுக்கிறோமா?


மற்றவர்கள் விஷயங்களையும், அவர்களது பணத்தையும் நம்மில் பெரும்பாலானோர் நம்முடையதைப் போல் பயன்படுத்தத் தவறி விடுகிறோம். ஒருவித அலட்சியம் தானாக வந்து விடுகிறது. அதன் விளைவுகள் நம்மை பாதிப்பதில்லை என்பதும் அவர்களை எந்த அளவில் பாதிக்கிறது என்பதை நாம் உணரத் தவறி விடுகிறோம் என்பதுமே அதற்கு முக்கியக் காரணம் என்று சொல்லலாம்.
எங்கோ படித்த ஒரு குட்டிக்கதை நினைவுக்கு வருகிறது.
ஒரு சீடன் மற்றவர்களைப் பற்றி உள்ளதும் இல்லாததுமாய் செய்திகளை மற்றவர்களிடம் சொல்லும் பழக்கம் உடையவானாய் இருந்தான். அதைக் கண்ட குரு அவனைக் கண்டித்தார். அவன் மன்னிப்பு கோரினான். ஆனாலும் அவனுடைய செய்கையின் தீமை அவன் மனதில் ஆழமாய் பதியவில்லை என்பதை அறிந்த குரு அவனிடம் ஒரு சிறு பஞ்சு மூட்டையைத் தந்து நகரத்தின் மையத்தில் உள்ள மைதானம் ஒன்றில் நின்று அதை சிறிது சிறிதாகப் பிய்த்து காற்றில் ஊதிப் பறக்க விட்டு வரும்படி சொன்னார்.
சீடன் வெகு சுலபமாக அதைச் செய்து விட்டு வந்தான். குரு சொன்னார். "சரி இப்போது போய் அதையெல்லாம் ஒன்று விடாமல் சேகரித்துக் கொண்டு வா".
சீடன் திகைத்தான். இதென்ன ஆகிற காரியமா? "குருவே அந்த பஞ்சு காற்றில் இன்னேரம் எங்கெங்கு பறந்து போய் இருக்கிறதோ? அதை எப்படி மறுபடி சேகரித்து வர முடியும்?"


"ஒரு மணி நேரத்திற்கு முன் பறக்க விட்ட பஞ்சுகளை உன்னால் சேகரித்து திரும்பக் கொண்டு வர முடியவில்லை. மற்றவர்களைப் பற்றி என்னென்னவோ சொல்லி வதந்திகளைப் பறக்க விட்டு வந்திருக்கிறாய். அவை யார் யார் வாயில் எப்படியெல்லாம் மீண்டும் திரிந்து என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தி இருக்கின்றனவோ. நீ மன்னிப்பு கேட்பதன் மூலம் அவற்றைத் திரும்பப் பெற முடியும் என்று நினைக்கிறாயா?"
அப்போது தான் அந்த சீடனுக்குத் தன் செயலின் தீமை முழுவதுமாகப் புரிந்தது. கண்ணீர் மல்க வெட்கித் தலை குனிந்த சீடன் அன்றிலிருந்த அந்தப் பழக்கத்தை அடியோடு விட்டான்.
நம்முடைய தவறான செய்திகள் எத்தனை பேரிடம் சென்று எப்படியெல்லாம் திரிந்து மற்றவர் மனதில் என்னென்ன அபிப்பிராயங்களை உருவாக்கி சம்பந்தப்பட்டவர்களை எப்படியெல்லாம் பாதிக்கின்றன என்பதை நாம் அறிவோமா? விளையாட்டாய் பொழுது போக்காய் அடுத்தவர் பற்றி நாம் முழுவதுமாக அறியாததைப் பற்றி சொல்லும் போது எத்தனை பெரிய பாதகத்தைச் செய்கிறோம் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.

சிலர் நாங்கள் உள்ளதைத் தானே சொல்கிறோம், உண்மையைத் தானே சொல்கிறோம் என்று மற்றவரின் பலவீனமான உண்மைகளையும், நல்லதல்லாத உண்மைகளையும் சொல்லக்கூடும். அப்போதும் ஒரு கேள்வியை நம்முள் கேட்டுக் கொள்வது மிகவும் நல்லது. "நம்முடைய எல்லா உண்மைகளையும் நாம் வெளியில் சொல்கிறோமோ? வெளியே நம்மைப் பற்றி தெரிய வேண்டாம் என்று நினைக்கிற தர்மசங்கடமான உண்மைகள் நம் வாழ்வில் இல்லவே இல்லையா?"
நாம் மனிதர்கள். நம்முள் மிக மேன்மையாவர்கள் கூட அந்த மேன்மையை எட்டுவதற்கு முன் எத்தனையோ தவறுகளை செய்து அதிலிருந்து கற்றிருக்கிறார்கள்; எத்தனையோ பலவீனங்களுடன் போராடிய பிறகே வென்றிருக்கிறார்கள். மற்றவர்களைப் பற்றி நாம் சொல்லும் தவறுகளை நாம் செய்யாதிருக்கக்கூடும். ஆனால் மற்ற எத்தனையோ தவறுகள் நாமும் செய்கிறோம். இப்படியிருக்கையில் நாம் அடுத்தவர் பற்றி வம்பு பேசுவது நியாயமா?
இனி யாராவது அடுத்தவர் பற்றி உங்களிடம் நல்லதல்லாதவற்றைச் சொல்ல வந்தால் பெரிய ஆர்வம் காண்பிக்காதீர்கள். சாக்ரடீஸ் போல சொல்ல முடியா விட்டாலும் நீங்கள் ஆர்வம் காண்பிக்காத போது மற்றவர்கள் உங்களிடம் சொல்வதைத் தானாகக் குறைத்துவிடுவார்கள். அதே போல் மற்றவர்களைப் பற்றி நல்லதல்லாதவற்றை நீங்கள் சொல்ல நினைக்கும் போது உதடுகளை இறுக்கிக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் நீங்கள் செய்யும் மிக உத்தமமான காரியம் அதுவாகத் தான் இருக்க முடியும்


சீரழியாமல் சீராகு!


அன்பு உள்ளங்களே! இன்று சமூக ஆரோக்கியத்தை கெடுத்து அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் அநேக தீமைகள், தவறுகளாக விளங்கிக் கொள்ளப்படுவதை விட அதுதான் வாழ்வின் அமைதிக்கு காரணம் என்று கருதப்படுகிறது,இந்த சிந்தனை விஷத்தை அருமருந்தாக கருதுவதற்கு சமமானதாகும்,
மலத்தை மணம் கமழும் சந்தனமாகவும்,அக்னியை ஆபரணங் களாகவும்,உயிர் பறிக்கும் விஷப்பாம்பை வெற்றி மாலையாகவும்,கல்லிப்பாலை கசாயமாகவும்,உடைந்த கண்ணாடி துண்டுகளை வைரங்களாகவும் ஆக்கிக்கொண்டு வடிகட்டிய முட்டாள்தனத்தோடு வாழ்பவர்களை அறிவாளிகள் என்று சொல்வோமா?அல்லது அறிவிலிகள் என்று சொல்வோமா?வெளுத்ததெல்லாம் பால் என்று எண்ணி வெற்றி மிதப்போடு வாழும் பல பேர், மரணம் வருபோதுதான் தனது தோல்வியை உணருகிறார்கள்.

அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:
وَأَنِيبُوا إِلَى رَبِّكُمْ وَأَسْلِمُوا لَهُ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَكُمُ الْعَذَابُ
[மனிதர்களே!]உங்களை வேதனை வந்தடைவதற்கு முன்பாகவே உங்கள் இறைவனின் பக்கம் திரும்பி அவனுக்கு முற்றிலும் வழிபட்டு விடுங்கள்!-39:54.
அல்லாஹ்வின் இந்த கட்டளை நமது வாழ்வை சீர்படுத்த  தூண்டக்கூடியதாக அமைந்துள்ளது.ஆனால் இதற்கு செவி தாழ்த்துபவர் யார்?
அன்பானவர்களே!சமூகம் இன்று அமைதி இழந்து வாழ காரணம் நமக்குள் உருவாகி விட்ட அதிகமான தீமைகள்,இந்த தீமைகள் பல காரணங்களால் உண்டாகலாம் ஆனால் இந்த தீமைகள் அதிகமாக “டி. வியின் மூலமே உண்டாகின்றன என்றால் அது மிகையல்ல.
ஒரு காலத்தில் நம் வீடுகள் குர்ஆன் ஓதப்படும் மதரஸாக்களாக தெரிந்தன,ஆனால் இன்று இருபத்தி நான்கு மணி நேர சினிமா தியேட்டர்களாக ஆகி விட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது.
கலிமா ஓதி தொட்டில் ஆட்டும் காலம் மலை ஏறிப்போய் கேடு கெட்ட சினிமா பாடல்களை பாடி தாலாட்டும் தரம் கெட்ட கலாச்சாரம் அரங்கேறி விட்டது.  
இந்த அருள்மறை அன்றைய கற்கால காட்டரபிகளையும் சொர்க்கத்து மலர்களாக மாற்றியது ஆனால் இன்று இந்த டெலிவிஷன் நல்ல குடும்பத்து மலர்களையும் நரக கொள்ளிகளாக மாற்றி விடுகின்றன.
கட்டுக்கோப்போடு வாழும் கண்ணியமான பெண்களை கற்பனை உலகில் சிறகடித்து பறக்க வைத்து கட்டுப்பாட்டை மீறுவதற்கு கற்றுக்கொடுக்கிறது.
குடும்ப குத்து விளக்குகளாகிய தாய்மார்களை கொழுந்து விட்டு எரியும் நரகமாக ஆக்கி குடும்ப நிம்மதியை கரியாக்கி விடுகிறது.
சீரியல்களில் மூழ்கி போனதால் சின்னஞ்சிறிய குழந்தை பாதாள சாக்கடையில் விழுந்து உயிரிழந்ததும் தெரியாமல் நாள் முழுதும் தேடிய செய்தி நம் தாய்மார்களின் உச்சகட்ட பொடுபோக்கை காட்டுகிரதல்லவா?
தொலைக்காட்சியின் முன் குடும்பமே வாய் பிளந்து அமர்ந்திருக்க விருந்தாளியை போல் ஹாயாக உள்ளே நுழைந்த திருடன் அனைத்தையும் அள்ளிச்சென்றதையும் அறியாது அனாச்சாரத்தில் ஐக்கியமாகிப்போன அம்மாமார்களின் அவலத்தை எங்கே சென்று சொல்வது?
இறை பக்தைகளாக வாழ வேண்டியவர்களை நிறை பைத்தியங்களாக மாற்றியது எது?சீர்கெடுக்கும் சீரியல்கள் அல்லவா?
அது மட்டுமா? நமது அன்பு செல்வங்களாகிய பிள்ளைகளை பேடிகளாக,பொருக்கிகளாக,கேடிகளாக,குடிகாரர்களாக,ஆக்கிபொறுப்பற்ற போக்கிரிகளாக சமூகத்தில் உலாவ விட்ட உலக மகா சேவை பெட்டகம் இந்த தொல்லைக்காட்சி பெட்டியல்லவா?
அன்பு உள்ளங்களே!இந்த அவலங்கள் அனைத்தயும் அழித்து குடும்பத்தில் குதூகலத்தையும் சமுதாயத்தில் மறுமலர்ச்சியையும் சங்கையான பிள்ளைச்செல்வங்களையும் இவ்வுலகில் நமக்கு தந்து மறு உலகிலும் நம் ஈடேற்றத்திற்கு காரணியாக இருப்பது எது தெரியுமா?
அதுதான் அகிலம் சிறக்க வந்த அருள் மறை அல்லாஹ் நமக்களித்த உயர் மறை அல் குர்ஆன் மஜீத்,
உலகில் நாம் பெற்றுள்ள கோடிக்கணக்கான செல்வங்களை விட அற்புத செல்வம் இந்த குர்ஆன்தான்.இதை நான் சொல்லவில்லை அன்பர்களே!அகிலங்களை படைத்து இரட்சிக்கும் பேரரசன் அல்லாஹ் சொல்கிறான்.
   قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَٰلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ
10:58அல்லாஹ்வின் அருட்கொடையினாலும், அவனுடைய பெருங்கிருபையினாலுமே (இந்த குர்ஆன் வந்துள்ளது, எனவே) - இதில் அவர்கள் மகிழ்ச்சியடையட்டும், அவர்கள் திரட்டி வைத்திருக்கும் (செல்வங்களை) விட இது மிக்க மேலானதுஎன்று (நபியே!) நீர் கூறும்.

நல்வழி காட்ட வந்த நமது உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருள் மொழியை பாருங்கள்!
இந்த ஹதீஸ் சஹீஹ் முஸ்லிமில் வந்துள்ளது:
 اقْرَؤوا الْقُرْآنَ , فَإِنَّهُ يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ شَافِعًا لأَصْحَابِهِ
 [முஃமின்களே!] குர்ஆனை ஓதுங்கள்! அது நாளை மறுமையில் அதை ஓதியவருக்காக பரிந்து பேசும். 
மற்றொரு நபி மொழியில்:
 الصِّيَامُ وَالْقُرْآنُ يَشْفَعَانِ لِلْعَبْدِ يَوْمَ الْقِيَامَةِ
குர்ஆனும் நோன்பும் மறுமையில் அடியானுக்காக பரிந்துரை செய்யும்.என்று வந்துள்ளது. [நூல்:அஹ்மத்]
அது மட்டுமா?
குர்ஆனை ஓதி அதை பாதுகாத்து அது ஹலாலாக்கியதை ஹலாலாகவும் அது ஹராமாக்கியதை தவிர்ந்து கொண்டும் வாழ்ந்த மனிதனை அல்லாஹ் சுவனத்தில் நுழைய வைப்பது மட்டுமில்லாமல் நரகம் விதியாகிய பத்து மனிதர்களை அவரது பரிந்துரையின் பேரில் சுவனத்திற்கு அழைத்து செல்லும் அனுமதியை அல்லாஹ் வழங்குவான்.என்று அண்ணல் எங்கள் ஆருயிர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அருளினார்கள்.[நூல்:இப்னு மாஜா,திர்மிதி]
அன்பு தாய்மார்களே!நெஞ்சின் மீது கை வைத்து சொல்லுங்கள்!நம்மில் எத்தனை பேர் இந்த சிபாரிசுக்கு தகுதி பெற்றுள்ளோம்?நம் பிள்ளைகளில் எத்தனை பேரை நம்மை சுவனத்திற்கு அழைத்து செல்லும் தகுதியில் வளர்த்துள்ளோம்?
நம் பிள்ளைகள் சினிமா பாடல்களை மனனமாக பாடினால் அதை பெருமையாக சொல்லி சொல்லி மகிழ்கிறோமே?அதற்கு தோதுவாக டான்ஸ் ஆடினாலோ கேட்கவே வேண்டாம்  நாம் அந்தரத்தில்  பறப்பது போன்று ஆனந்தமடைகிறோமே?இது கேவலம் இல்லையா?
சூப்பர் ஹிட் பாடல்களில் பத்து பாடல்கள் மனனம் செய்தால் சூப்பர் சொர்க்கம் கிடைக்கும் என்று யாராவது கூறியுள்ளார்களா?
ஆனால் அறிந்து கொள்ளுங்கள்!
அண்ணல் நபியின் அமுத வாக்கு ஒன்று:மறுமையில் குர்ஆன் உடையவரை நோக்கி ஒதுவாயாக!உலகில் நீ அழகு பட ஓதியதை போல இப்போதும் ஓதுவாயாக!எங்கே சென்று ஓதுவதை நீ நிருத்துவாயோ அங்குதான் உனது அந்தஸ்து உள்ளது என்று அல்லாஹ் கூறுவான்.[நூல்:திர்மிதி]
இதன் பொருள் என்ன தெரியுமா?பத்து ஆயத் என்றால் பத்து அந்தஸ்து,,நூறு ஆயத் மனனம் செய்தால் நூறு அந்தஸ்து என்று நாம் மனனம் செய்துள்ள குர்ஆன் வசனங்களை கொண்டுதான் நம் பதவிகள் நிர்ணயம் செய்யப்படும்,
அன்பான பெரியார்களே!இந்த சூழ்நிலையில் நமது அந்தஸ்து என்ன?ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.
குர்ஆனை கற்று அதன் படி செயல்பட்டவரின் பெற்றோருக்கு மறுமையில் ஒளிமிக்க கிரீடம் அணிவக்கப்படும் அதன் ஒளி நமது வீட்டுக்குள் சூரியன் வந்தால் எப்படி இருக்குமோ அவ்வாறு பிரகாசிக்கும் என்று பூமான் நபி போதித்தது நம் காதுகளில் ஏன் விழவில்லை?
பொத்தி பொத்தி வளர்த்த பிள்ளை மூலம் சொத்து சேர்கிறோம் புத்தி கலங்கி போகும் அந்த மறுமைக்காக எதை சேர்த்தோம்?
அன்பர்களே!எந்த வீட்டில் அருள் மறை ஓதப்படுமோ அங்கு அல்லாஹ்வின் அமைதி இறங்கும் அருள் மிகும் மலக்குகள் அங்கு கூடி விடுவர் என்பது நபி மொழி,இன்று நம் வீடுகளில் அமைதி உண்டா? இல்லை அருள்தான் உண்டா?ஏன் இல்லை என்றைக்காவது சிந்தித்தோமா?
உயிர் போகும் நேரம் தொலைவில் இல்லை,நம் கையில் எடுக்கும் உணவு வாயை அடையும் முன் மரணம் வந்து விடலாம்.ஒரு ஸலாம் கொடுத்து மறு ஸலாம் கொடுக்கும் முன் இறப்பு நம்மை இராய்ஞ்சி சென்று விடலாம்.
மனைவியிடம் தண்ணீர் கேட்டவர் அது வருவதற்குள் மாரடைப்பில் இறந்தார்,புதுமண தம்பதிகளை ஏற்றி சென்ற வேன் புளிய மரத்தில் மோதி அதே இடத்தில் அனைவரும் மாண்டனர்,என்பன போன்ற  செய்திகள் ஊசலாடும் நம் உறுதியற்ற வாழ்வின் இலட்சனத்தையல்லவா சொல்கிறது,அதன் மூலம் பாடம் படிப்பது எப்போது?
அன்பு உள்ளங்களே!சமூகத்தை சீரழித்து நம் அமைதியை உருக்குலைத்து நம் வாழ்வை நிலை குலைய செய்யும் டெலிவிஷன்களை மூட்டைக்கட்டி அவற்றுக்கு மூடு விழா நடத்துவோம்,அன்பு அமைதி அருள் ஆனந்தம் அழகிய நடத்தைகளை அள்ளி தரும் அருள் மறை குர்ஆனை தூசி தட்டி எடுத்து தினமும் அதனை  ஓதி தூய வழியில் நடை போடுவோம், 
யா அல்லாஹ் குர்ஆனின் மூலம் எங்களின் வாழ்வை ஒளி பெறச்செய்!எங்களின் குணங்களை அழகாக்கி வை!அதைக்கொண்டு நரக விடுதலையைத்தா!அந்த மறை மூலம் எங்களை சுவனத்தில் பிரவேசிக்கச்செய்!இந்த குர்ஆனை இம்மையிலும் மறுமையிலும் எங்களின் உற்ற தோழனாக்கி வைப்பாயாக!
பிரஹ்மத்திக்க யா அர்ஹமர்ராஹிமீன்!வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.
வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹ்.

வேண்டாம் வரதச்சனை.


நாமெல்லாம் முஸ்லிம்களாக பிறந்ததற்காக அல்லாஹ்வுக்கு மிகவும் நன்றி செலுத்த கடமைப் பட்டுள்ளோம்.காரணம் இந்த மார்க்கத்தைக்கொண்டுதான் மறுமை நாளில் வெற்றி பெற்று மகிழ்சி நிறைந்த சுவனத்தை அடைய முடியும்.இந்த மார்க்கம் ஒரு அல்லாஹ்வின் அருள் அந்த அருளை நம் மீது பரிபூரமாக்கி வைத்துள்ளதாக அல்லாஹ் கூறுகிறான்.இந்த வசனத்தை கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஜ்ஜத்துல் விதாவில் இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தில் பிரகடனம் செய்கிறார்கள்
 الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا ۚ
 இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்; [அல் குர் ஆன்,5:3]
சங்கையானவர்களே!அல்லாஹ்வின் இந்த மார்க்கம் பரிபூரணத்தை உடையது என்று ஏன் சொல்லப்படுகிறது தெரியுமா?இந்த மார்க்கம் பேசாத எந்த துறையும் இந்த உலகில் இல்லை
வணக்கம்,வாணிபம்,கல்வி,நீதி,போர்,அரசியல்,வாழ்க்கை,திருமணம்,குழந்தை வளர்ப்பு,பரிசுத்தம்,நாகரீகம்,இப்படி இந்த உலக வாழ்வில் மனிதன் சந்திக்கும் அத்துனைப் பிரச்சினைகளுக்கும் இந்த மார்க்கம்வழிகாட்டும் கலங்கரையாகும்.
 இந்த முறைப்பேணி வாழ்ந்தால் வாழ்க்கையும் வணக்கமாகும்,இந்த முறை சாராத வணக்கம் கூட வழி கேடாகும் என்று திட்டவட்டமாக அறிவிப்பு செய்து திக்குத்தெரியாத யாவருக்கும் திசைக்காட்டி வாழ்க்கையில் தித்திப்பை ஊட்டுகிறது இந்த இஸ்லாம்.
அன்பானவர்களே!நமது வாழ்வில் இன்றியமையாத அதே நேரம் இனிமையான ஒரு தருணம்தான் திருமணம் என்பது, அந்த திருமணத்தை பற்றி சிலர் “திருமணம் சுவர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது”என்று கூறுவார்கள்.ஆனால் நமது கண்மணி நாயகத்தின் வழிகாட்டல் சொல்லும் பாடம் என்ன தெரியுமா?
திருமணம் மனிதனின் கண்களையும் மானத்தையும் பாதுகாக்கிறது எனவே திருமணம் செய்யுங்கள்!-[புகாரி,முஸ்லிம்.]
உலகம் ஒரு சிற்றின்பம் சிறந்த மனைவிதான் [பேரின்பம் தரும்]பெரும் செல்வம், [முஸ்லிம்.]
நான்கு விஷயங்கள் எவரிடத்தில் இருக்குமோ அவர் இம்மை மறுமையின் அத்துனை நன்மைகளை[அதாவது மகிழ்ச்சி,சந்தோஷம்]அனைத்தையும் அடைந்து கொண்டார்,[ஒன்று]நன்றியுள்ள உள்ளம்.[இரண்டு]இறைவனை நினைத்து திக்ரு செய்யும் நாவு.[மூன்று]துன்பங்களை தாங்கி கொள்ளும் உடல்.[நான்கு]தன் மூலமோ தன் கணவனின் பொருள் மூலமோ தான் கணவனுக்கு மோசம் செய்யாத சாலிஹான மனைவி.[ஆதாரம்:தப்ரானி]
கண்ணியமிக்கவர்களே!இந்த பூமான் நபியின் பொன் மொழிகள் நமக்கு புகட்டும் பாடம் என்ன தெரியுமா?பூரிப்பும் பெருமிதமும் நிறைந்த புனித சுவனம் வேறெங்கும் இல்லை அல்லாஹ் ரசூல் காட்டிய வழிமுறையில் தன் வாழ்வை அமைத்துக்கொண்டால் நமது திருமணம் ஒரு சொர்க்கப்பாதை,
ஆனால் இன்று நடப்பதென்ன?
திருமணம் பலரை தீக்கங்குகளாக சுடுகின்றன,பெண்ணை பெற்றவர்களை பெரும் சுனாமியாக மிரட்டுகிறது,கன்னிப்பெண்களை கண்ணீர் வடித்து கதற வைக்கிறது.பலருக்கு பஞ்சனை கூட பயங்கர நரகமாய் போய் விடுகிறது.இவ்வளவு சிரமங்களோடு திருமணம் நடந்தாலும் அந்த வாழ்வில் நிம்மதி என்பது பூஜ்யமாகி தரித்திரம் தலை விரித்தாடுகிறதே?ஏன்?
அனாச்சாரங்களின் ஆணிவேர்களில் வளர்ந்த வாழ்க்கை விருட்சம் வசந்தத்தை எப்படி தரும்?
இலட்சியமில்லாமல் இலட்சங்களை அள்ளி இறைத்து நடத்தப்படும் கல்யாணம் பரக்கத்தை எப்படி பொழியும்?
   وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً ۚ
 நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடுகொடுத்துவிடுங்கள். [அல்குர்ஆன்.4:4]
என்று நம்மைப் படைத்தவன் சொல்ல, இல்லை இல்லை கைக்கூலி வாங்கிதான் கல்யாணம் பண்ணுவேன் என்று காட்டுமிராண்டித்தனம் செய்தால் கவலைகளும்,கொடுமைகளும் ஓடி வந்து கட்டி அணைக்காமல் வேறென்ன செய்யும்.
அம்மா முஸாஃபர் நிக்கிறேன்மா!எதாவாது கொடுங்கம்மா!என்று கூப்பிடும் பிச்சைக்காரர்களை விட இந்த கௌரவ பிச்சைக்காரர்கள் மிகவும் டேஞ்சர்!
காரணம், தான் பெற்ற ஆண்பிள்ளைகளை பந்தய பொருளாக்கி கல்யாண சந்தையில் கட்டுப்பாடு இன்றி விளையாடும் சூதாடிகள் இவர்கள்,
பெண்பார்ப்பு என்றும், நிச்சயார்த்தம் என்றும், நாள் குறிப்பு என்றும்,இந்த கூட்டம் அடிக்கும் கொட்டம்  கொஞ்சமா நஞ்சமா?
சீர் என்றும் சீராட்டு என்றும்  சீதனம் என்றும் சீர்கேடுகளை இறக்குமதி செய்து சமூகத்தின் சாதனையாளர்களாக பெருமிதமடையும் இவர்கள், மறுமையில் சாதிக்கப்போவதென்ன?
செல்வந்தனாவது முக்கியமில்லை அன்பர்களே!அதை எப்படி சேகரித்தோம் என்பதுதான் முக்கியம்.
இறைத்தூதர் கண்மணி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்:
இச்செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். எனவே, ஒரு முஸ்லிம், தன்செல்வத்திலிருந்து ஏழைகளுக்கும் அனாதைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும்வரை அது அவனுக்குச் சிறந்த தோழனாகும். யார் முறையின்றி அதை எடுத்துக் கொள்கிறானோ... அவன் உண்டும் வயிறு நிரம்பாதவனைப் போன்ற வனாவான். மேலும், மறுமை நாளில் அச்செல்வம் அவனுக்கு எதிராக சாட்சி சொல்லும்" எனக் கூறினார்கள்.[புகாரி]
நாம் தொழுகிறோம்,நோன்பு வைக்கிறோம்,தான தர்மங்கள் செய்கிறோம்,இறை இல்லம் கஃபா சென்று ஹஜ் உம்ரா செய்கிறோம்,இவை அனைத்தும் எதற்காக?மறுமையின் வெற்றிக்காக அல்லவா?
ஆனால் நாம் செய்கின்ற சில காரியங்கள் பயங்கரமான அந்த மறுமையில் நம் நன்மைகளை அழித்து நம்மை ஏழைகளாக ஆக்கி கைசேதத்தோடு கண்ணீர் சிந்த வைக்கும் என்றால் அந்த காரியங்கள் தேவைதானா?இறை கோபத்தை சம்பாதித்தரும் அந்த வீண் பந்தா அவசிம்தானா?சொந்தம் சொத்து எதுவுமில்லாத அந்த நாளில் சுவனத்தை விட்டும் தடுக்கும் இந்த அவலம் நமக்கு வேண்டுமா?சொல்லுங்கள் தாய்மார்களே!
ஒருமுறை நமது உயிரினும் மேலான உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தமது தோழர்களை நோக்கி “பரம ஏழை யார்?”என்று வினா விடுத்தார்கள்,அதற்கு தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே!எவரிடம் செல்வமில்லையோ அவர்தான் பரம ஏழை”என பதில் கூறினார்கள்,நாமும் அவ்வாறுதான் சொல்வோம் இல்லையா?
ஆனால் அன்பர்களே!அண்ணல் நபி [ஸல்]அவர்கள் அதற்கு கூறிய வியாக்கியானம் நம்மை அதிர வைக்கறது,அப்படி என்ன அதிர்ச்சி,
நபியவர்கள் கூறினார்கள்:உண்மையான ஏழை யாரெனில் மறுமையில் ஒருவன் பெரிய நன்மையின் குவியலோடு வருவான் அந்த குவியலை ஒரு மலை மீது வைத்தாலும் அதுவும் அதன் பளு தாங்காது உடைந்து சிதைந்து விடும் ,அந்த நன்மையின் பெருக்கத்தினால் தான் வெற்றி பெறப்போவது உறுதி என்று அவன் கற்பனை செய்வான்,
அப்போதுதான் ஒரு அபாயம் நிகழும்.
சிலர் அவன் மீது குற்றம் கூறி வழக்கு தொடர்வார்கள்,அவர்களில் ஒருவர்”யாஅல்லாஹ் இவன் என்னை அடித்தான்”என்று கூறுவார்,இன்னொருவர் “இவன் என்னை திட்டினான் என்பார்,இன்னொருவர் “இவன் என் சொத்தை அநியாயமாக  எடுத்துக்கொண்டான் என்பார்.
வழக்காளிகள் ஒவ்வொருவருக்கும் இவனது நன்மைகளில் இருந்து எடுத்து பங்கு வைத்து கொடுக்கப்பட்டு அனைத்தும் தீர்ந்து போகும்.அதன் பிறகு ஒருவர் வந்து அவன்  மீது குற்றம் சுமத்துவான் ஆனால் அவருக்கு எடுத்து கொடுக்க இவனிடம் நன்மை எதுவும் இல்லாததால் அந்த வழக்காளியின் பாவம் இவன் மீது சுமத்தப்படும்,
என்ன கைசேதம் பாருங்கள்!மலை போன்று நன்மைகளை  கொண்டு வந்தவன் அவை அனைத்தையும் இழந்து விட்டு அடுத்தவனின் பாவங்களையும் சேர்த்து சுமந்தவனாக [கவலையோடும் கை சேதத்தோடும் கண்ணீரோடும்]நரகத்தில் நுழைகிறான்,ஏழைகளில் பரம ஏழை இவன்தான்.என்று நபி[ஸல்]அவர்கள் விளக்கினார்கள்.
நவூது பில்லாஹ்!அல்லாஹ் நம்மை காப்பானாக!பெண்ணை பெற்று பொத்தி பொத்தி வளர்த்து கண்ணியமான கன்னியாக ஒருவனிடம் ஒப்படைக்கும் போது அவன் கரும்பு தின்ன காசு கேட்ப்பதை போல கைக்கூலி கேட்ப்பது அணியாயமில்லையா?
அன்பு தாய்மார்களே!தனியாக சமையலுக்கு ஒருத்தியை ஏற்படுத்தி அவளுக்கு கூலி கொடுக்கிறீர்கள்,துணி துவைக்க ஒருத்தியை வைத்து அவளுக்கு கூலி கொடுக்கிறீர்கள்,பாத்திரம் தேக்க ஒருத்தியை வைத்து அவளுக்கு கூலி கொடுக்கிறீர்கள்,இப்படி வேலை செய்பவர்களுக்கு கூலி கொடுக்கும் நீங்கள் உங்கள் வீட்டில் சமையல் காரியாக துணி துவைப்பவளாக,பாத்திரம் தெய்ப்பவளாக, உங்கள் மகனுக்காக தன்னையே கொடுத்து உங்க குடும்ப  பிச்சலங்கள் உலகில் நடமாட தன் வயிற்றை தொட்டிலாக்கி தன் இரத்தத்தை உணவாக்கி உங்கள் வீடே கதி என்று தன் தாய் வீட்டை துறந்து பெரும் தியாகியாக வாழப்போகும்  உங்கள் மருமகளுக்கு கூலி கொடுத்தீர்களா? கூலி வாங்கினீர்களா?இது என்ன நியாயம்,இது கொடுமை இல்லையா?இதற்கு அல்லாஹ்விடம் என்ன காரணம் சொல்வீர்கள்?
அன்று அரபுகள் அறியாமைக் காலத்தில் பெண் பிள்ளைகளை பிறந்தவுடன் உயிருடன் புதைத்தார்கள் அவர்களை கற்கால மக்கள் என்று சரித்திரம் பேசுகிறது,
இன்று வளர்த்தவர்களிடம் கைக்கூலி வாங்கிக்கொண்டு அவர்களின் கண்ணுக்கு முன்னாலே இந்த பேதை பெண்ணை அணு அணுவாக கொல்லாமல் கொள்கிறீர்களே?உங்களை என்ன பெயர் சூட்டி அழைப்பது?
கருணை நபியவர்கள் கூறினார்கள்:
الظلم ظلمات يوم القيامة  [அள்ளுல்மு ளுலுமாதுன் யவ்மல் கியாமாஹ்]உலகில் செய்யும் அநியாயம் மறுமையில் பல இருள்களாக வரும்,
அன்பு மிக்கவர்களே!பிறந்த எவரும் நிரந்தரமாய் வாழ்ந்ததாக சரித்திரமில்லை,நாம் பிறந்த அன்று முதல் மரணத்தை நோக்கி நம் பயணம் துவங்கி விட்டது அது எப்போது முடியும் யாருக்கும் தெரியாது,
கண்மூடும் அந்த நேரம்,கப்ரில் புதைக்கப்படும் அந்த தருணம்,அங்கிருந்து எழுப்பப்படும் மஹ்ஷர் மைதானம்,சிராத் பாலத்தை கடக்கும் அந்த சமயம்,இந்த நேரம் அனைத்தும் எல்லோரும் எல்லாரையும் மறக்கும் நேரம் நம் சொந்தமோ நம் சொத்துக்களோ அங்கு உதவிக்கு வராது,நம் நல்ல காரியங்கள் மட்டுமே உதவி செய்யும்.
எனவே வாழ்க்கையில் முக்கிய நிகழ்வாகிய திருமணம் நபி வழியின் அடிப்படையில் நடை பெருமானால் நம் வாழ்வும் நம் பிள்ளைகள் வாழ்வும் வளமாகவும் வணக்கமாகவும் மாறும்,அதற்காக நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் கைக்கூலி இல்லாத திருமணங்களை ஊக்குவிக்க வேண்டும்,
வரதட்சணை கொடுத்து என் பெண்ணை கட்டிக் கொடுக்க மாட்டேன் என்று பெண் வீட்டாரும், வரதட்சணை வாங்கி  என் மகனுக்கு திருமணம் செய்யமாட்டேன் என்று ஆண் வீட்டாரும் இறை அச்சத்துடன் ஒரே உறுதியாய் இருக்கணும்,
 வரதட்சணை வாங்கினால் நான் கல்யாணம் செய்யமாட்டேன் என்று ஓர் ஆணும், வரதட்சணை கொடுத்தால் நான் கல்யாணம் செய்யமாட்டேன் என்று ஓர் பெண்ணும் உறுதியாய் இருக்கணும்,
வரதட்சணை வாங்கப்பட்ட கல்யாணத்தை, அனைவரும் ஒட்டு மொத்தமாக புறக்கணிக்க வேண்டும்!

இந்த உறுதி வெறுமனே உண்டாகாது மாறாக மார்க்க அறிவும் அதன் படி நடப்பதின் முக்கியத்துவமும் நம் பிள்ளைகளுக்கு விளக்கப்பட வேண்டும்.

அருள் மறை குர்ஆன் அன்றாடம் பொருள் அறிந்து ஓதப்படுவதோடு அல்லாஹ்வின் நல்லடியார்களின் வரலாறுகள் வீடுகளில் பேசப்பட வேண்டும்.

இம்மையின் இழி நிலைகளும் மறுமையின் முக்கியதத்துவமும் இளமையிலேயே இதயங்களில் விதைக்கப்பட வேண்டும்.

ஹலாலின் அவசியமும் ஹராமின் அபாயமும் அவசியமாக அனைவருக்கும் போதிக்கப் பட வேண்டும்.

அன்பான தாய்மார்களே!அனாச்சாரங்களை அறுத்தெரிவோம்,வரதச்சனை அரக்கனை விரட்டியடிப்போம்.வெற்றியின் விடிவெள்ளி உதயமாகிட,வேற்று சடங்குகளை உதறித்தள்ளுவோம்,
அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக!ஆமீன் யாரப்பல் ஆலமீன் வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹ்.