Jul 28, 2010


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனுமாகிய அல்லாஹ்வின் திரு நாமத்தால்...

எல்லாப் புகழும் இறைவனுக்கு,
அல்லாஹ் ஒருவனே துணை நமக்கு.

சமூக நல்லிணக்கம்[2]

வரலாற்று ஒளியில் நம் நெஞ்சை நெகிழவைக்கும் மற்றொரு நிகழ்ச்சியையும் காணுகிறோம்;நபியவர்களுக்கு நபிப்பட்டம் கிடைப்பதற்கு ஐந்து வருடங்களுக்கு முன்[நபியின் 35 -வது வயதில்] கஃபா புதுப்பித்துக் கட்டும் பணி நடைபெற்றது, வேலை வெற்றிகரமாக முடியும் நிலையில் மிகப்பெரிய பிரச்சினை ஒன்று வெடிக்கிறது; "ஹஜ்ருல் அஸ்வத்" என்ற புனிதக் கல்லை அதன் இடத்தில் எடுத்து வைத்து பதிப்பது யார்? அந்த பாக்கியம் தங்களுக்கே வேண்டும் ; என்று அவர்களில் ஒவ்வொருவரும் வாதிட்டார்கள். நிறைவடைய இருந்த புனித வேலை தடைப்பட்டு முடங்கி நின்றது; இதை எதிர் கொள்வது எப்படி என்று வழி தெரியாமல் தலைவர்கள் விழி பிதுங்கி நின்றார்கள். இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வேண்டி,மக்காவில் வாழும் அனைத்து கிளையினரும் ஒன்றுகூடி ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினர். அதில் எடுக்கப்பட்ட முடிவாவது;"நாளை அதிகாலையில் விடியும்முன் முதன்முதலாக எவர் [ ஹரம் என்ற அந்தப்] பள்ளிக்குள் நுழைகிறாரோ அவரே அந்த கல்லை எடுத்து வைப்பார்". முடிவின்படி அதைக்கண்காணிக்க ஒரு குழு நியமனம் செய்யப்பட்டு கண்காணித்துக்கொண்டிருந்தனர். அதிகாலைக்கருக்கல் நேரம், ஒரு உருவம் மெதுவாக உள்ளே நுழைந்து; கஃபா வுக்கு முன் சென்று, தொழுகையை ஆரம்பித்தது. கண்காணித்தவர்கள்,ஓடிச்சென்று "யார் அந்த பாக்கியசாலி" என்று ஆவலோடு பார்த்து விட்டு;இதோ இவர் நம்பிக்கையாளர், உண்மையாளர்,என்று சப்தம்போட்டு அழைத்தனர். ஓடி வந்த மக்கள் அங்கு நின்றுகொன்டிருந்த முஹம்மத் நபி[ஸல்] அவர்களைப் பார்த்து"இவர்தான் இதற்கு தகுதியானவர்" எனக்கூறியவர்களாக; அவர்களது கரத்தைப் பிடித்து வாழ்த்துக்கூறினார்கள். விடிந்த பிறகு "புனிதக்கல் பதிக்கும் நிகழ்ச்சி" நடை பெறுகிறது; அதனைக்காண மக்கள் கூட்டம் அலைக்கடலெனத் திரண்டிருக்க,நபியவர்கள், தனது தோளில் கிடந்த கணமான ஒரு துணியை எடுத்து கீழே விரித்து அதன் மீது அந்த புனிதக்கல்லை தூக்கி வைத்துவிட்டு, அங்கு ஓர் அறிவிப்பு செய்கிறார்கள்;"மதிப்பு மிகுந்த இந்த மக்காவின் கிளையார்களின் தலைவர்கள் தயவு செய்து முன்னால் வாருங்கள்!; ஒன்றும் புரியாத அந்த தலைவர்கள் முன்னால் வந்து நிற்கிறார்கள். அவர்களை நோக்கி நபியவர்கள்; இந்த துணியின் ஓரங்களைப் பிடித்து தூக்குங்கள்! என்று கூற அவர்களும் தூக்கினர். உடனே அன்னார் அந்த கல்லை எடுத்து அதன் இடத்தில் வைத்தார்கள். பிரச்சினை முடிவுக்கு வர,மக்கள் மகிழ்ச்சியோடு களைந்து போனார்கள். தனக்கு கிடைத்த இந்த அரிய வாய்ப்பைப் பயன் படுத்தி தான்பெரியாளாக வேண்டும் என்று எண்ணி விடாமல், "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற கொள்கையோடு அனைத்து சமூக மக்களையும் நல்லிணக்கத்தோடு அரவணைத்து வாழ்ந்த இந்த பாங்கு யாருக்கு வரும்?. "ஒரே இறைவன்" என்ற கொள்கைப் பிரச்சாரம் பிடிக்காத ஒரே காரணத்திற்காக பல சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட அன்னாரின் மீது ஒரு வயதான மூதாட்டி ஒவ்வொரு நாளும் குப்பைகளை கொட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்,ஆனால் ஒரு குப்பை விழாததைக் கண்ட அவர்கள்;எங்கே அந்த நல்லிணக்கம் தொடரும்...மூதாட்டி ?' என்று விசாரிக்க, அவர் நோய் வாய்ப்பட்டுள்ளார்,என்று கூறப்பட்ட போது; அவரது வீடு தேடிச்சென்று"தாயே! எப்படி இருக்கிறீர்? தங்களுக்கு ஏதாவது உதவி தேவையென்றால் தயங்காமல் கேளுங்கள்;"என்று அன்போடு விசாரித்த போது நெகிழ்ந்து போன அந்த தாய்,அக்கணமே இஸ்லாமிய மார்க்கத்தில் இணைந்தார். இத்தகைய நெஞ்சை நெகிழ வைக்கும் நிஜமான நிகழ்ச்சிகள் ," நபிகளாரின் நல்லிணக்க வாழ்வுக்கு நற்சான்றுகள்" நல்லிணக்கம் தொடரும்....