Aug 31, 2010

5-வது நாள் [சமாதானம் செய்வது].

link

அல்லாஹ் கூறுகிறான்:[நபியே!]அவர்கள்[உங்களுடன்]பேசும் இரகசியங்களில் பெரும்பாலானவற்றில் யாதொரு நன்மையுமில்லை.ஆயினும் தானம் கொடுப்பதைப் பற்றியோ,நன்மையானவற்றைப் பற்றியோ,மனிதர்களுக்கு மத்தியில் சமாதானம் ஏற்படுத்துவதைப் பற்றியோ பேசுபவற்றைத் தவிர.ஆகவே,எவரேனும் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடி இவ்வாறு [இரகசியம்]பேசினால்[மறுமையில்]நாம் அவர்களுக்கு மகத்தான[நற்]கூலியை வழங்குவோம்.[4:114]. சகோதரர்களே! இன்று நாம் எடுத்துக் கொண்டத் தலைப்பு சமாதானம் செய்து வைப்பது.ஒரு முஸ்லிமிடம் இருக்க வேண்டிய பண்புகளில் இதுவும் முக்கியமான ஒன்றாகும்.காரணம் இனம் மொழி நிறம் பேசி பிரிந்து போனவர்களைப் பற்றி பேசுவது ஒருபக்கமிருக்க,ஒரே இறைவன் என்ற கொள்கையில் பிடிப்போடு இருக்கும் நம்மவர்களைப் பற்றி சற்று நிதானமாக சிந்தித்துப் பார்ப்போம்,வரட்டு வாதம் பேசி முரட்டுத் தனம் காட்டும் சிலபேரின் நடவடிக்கைகளால் ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு ஊரிலும் பிரிவினைவாதம் தலைத் தூக்கியுள்ளன.ஃபிர் அவ்ன் என்ற கொடுமைக்கார மன்னனிடம் மூஸா[அலை]அவர்களையும்,ஹாரூன்[அலை]அவர்களையும் நியாயத்தையும் ஓரிறைக் கொள்கையையும் எடுத்துக் கூற அனுப்பிய அல்லாஹ்,அவ்விருவரையும் நோக்கி கூறியதை அன்பு சகோதரர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.அல்லாஹ் கூறுகிறான்:நீங்கள் இருவரும் அவனுக்கு நளினமாகவே உபதேசம் செய்யுங்கள்,அவன் நல்லுணர்ச்சி பெறலாம்.[20:44].சரி நமது தலைப்புக்கு வருவோம்.அன்பானவர்களே!அல்லாஹ் கூறுகிறான்:நிச்சயமாக நம்பிக்கையாளர்கள் [முஃமிங்கள்]அனைவரும் சகோதரர்களே,ஆகவே உங்கள் சகோதரர்களுக்கிடையில் சமாதானம் செய்து வையுங்கள்!.இதன் காரணமாக நீங்கள் அவனுடைய அருளை அடைவீர்கள்.[49:10].ஒரு முறை நபி[ஸல்]அவர்கள் [தோழர்களே!]நோன்பு,தொழுகை,தர்மம் இவற்றுக்காக கிடைக்கும் கிடைக்கும் பதவிகளை விட சிறந்த பதவிக்குரிய நற்காரியம் ஒன்றை உங்களுக்கு கூறட்டுமா?.என்று வினவ,அவசியம் கூறுங்கள்!அல்லாஹ்வின் தூதரே! என தோழர்கள் பதில் கூறினார்கள்.நபியவர்கள் கூறினார்கள்:[சண்டையிட்டுக்கொண்ட]இருவருக்கு மத்தியில் சமாதானம் செய்து வையுங்கள்,மாறாக இருவருக்கு மத்தியில் குழப்பங்களை உண்டாக்குவது,நன்மைகளை இல்லாமல் ஆக்கிவிடும்.[நூல்:திர்மிதி,அபூதாவூத்]மற்றொரு நபி மொழியில்:"இரண்டு பேருக்கு மத்தியில் சமாதானம் செய்து வைப்பவர் [ஒருபோதும்]பொய் சொன்னவராக ஆக மாட்டார்,அவர் நல்லதையே கூறுகிறார்,நன்மையை வளர்க்கிறார்".[நூல்:முஸ்லிம்].என்று வந்துள்ளது.மற்றொரு நபி மொழியில்:"மனித உடலில் உள்ள அனைத்து மூட்டுகளுக்குப் பகரமாகவும் சூரியன் உதயமாகும் ஒவ்வொரு நாளும் தர்மம் கொடுக்க வேண்டும்,இருவருக்கு மத்தியில் நீதம் செலுத்திசமாதானத்தை உண்டாக்குவதும் தர்மமே,தன் வாகனத்தில் ஒருவரை ஏற்றி உதவுவதும் தர்மமே,அல்லது அவரது சுமையை தம் வாகனத்தில் ஏற்றி உதவுவதும் தர்மமே,நல்ல வார்த்தையைக் கூறுவதும் தர்மமே,தொழுகைக்காக எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டும் தர்மமே,பாதையில் இடர் தரும் பொருட்களை அகற்றுவதும் தர்மமே.என்று கூறப்பட்டுள்ளது.[நூல்:புகாரி,முஸ்லிம்].ஒரு முறை நபி[ஸல்]அவர்கள் தனது மூத்த பேரன் ஹஸன்[ரழி]அவ்ர்களைக்காட்டி"இதோ இந்த எனது பேரர் ஒரு தலைவராவார்,[பிற்காலத்தில்]முஸ்லிம்களின் இரு பெரும் கூட்டங்களுக்கிடையே சமாதானம் செய்து வைப்பார்"[நூல்:புகாரி]அவ்வாறே பிற்காலத்தில் முஆவியா[ரழி]அவர்களோடு சண்டை செய்யும் சூழ் நிலை ஏற்பட்ட போது சமாதான நாயகராகத் திகழ்ந்தார்கள். நபி[ஸல்]அவர்களின் முப்பத்தி ஐந்தாவது வயதில் கஃபா கட்டப் பட்ட போது ஹஜ்ருல் அஸ்வது கல்லை அதன் இடத்தில் பதிப்பது யார்? என்ற பிரச்சனை எழுந்தபோது,அதை ஏற்படுத்திக் பிரச்சனையும் இன்றி அனைவருக்கும் அந்த வாய்ப்பை ஏற்ப்டுத்திக் கொடுத்து சமாதானம் செய்து வைத்ததும் நாம் அறிந்த ஒன்றே.இவ்வாறு முஸ்லிமின் தூய பண்புகளில் இந்தபண்பும் தலையாயது என்பதை விளங்கி அனைவரும் அன்பும் கருணையும் உடையவர்களாக வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக!ஆமீன். link