Feb 6, 2013

பெருமான்[ஸல்]அவர்கள் பரக்கத்தானவர்கள்

(1)பரகத்தான ரோமம்[முடி]
உஸ்மான் இப்னு அப்தில்லாஹ் இப்னி மவ்ஹப்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு ஸலமா(ரலி) அவர்களிடம் என்னை என் குடும்பத்தார் ஒரு தண்ணீர்ப் பாத்திரத்தைக் கொடுத்து அனுப்பிவைத்தார்கள். (உம்மு ஸலமா ஒரு சிமிழைக் கொண்டுவந்தார்கள்.) அது வெள்ளியால் ஆனதாக இருந்தது. அதில் நபி(ஸல்) அவர்களின் முடிகளில் ஒரு முடி இருந்தது. (பொதுவாக யாரேனும்) ஒருவருக்கு கண்ணேறு அல்லது நோய் ஏற்பட்டால், அவர் தம் நீர் பாத்திரத்தை உம்மு ஸலமா(ரலி) அவர்களிடம் அனுப்பி வைப்பார். (அவர்கள் தம்மிடமிருந்த நபியவர்களின் முடியைத் தண்ணீருக்குள் முக்கி அனுப்புவார்கள். அதை நோயாளி குடிப்பார்.) நான் அந்தச் சிமிழை எட்டிப் பார்த்தேன். (அதில்) சில சிவப்பு முடிகளைக் கண்டேன்.[புகாரி]
                                    *********************
(2)பரகத்தான கைஜாடை.
ஒருமுறை அபூஹுரைரா[ரழி]அவர்கள் நபி ஸல்லல்லாஹுஅலைஹிவசல்லம் அவர்களிடம் வந்து "அல்லாஹ்வின் தூதரே!நான் தங்களிடமிருந்து நிறைய ஹதீஸ்களை கேட்க்கிறேன் ஆனால் அவை என் மனதில் பதியாமல் சீக்கிரமாக மறந்து விடுகிறது,[எனவே அவற்றை மறக்காமல் இருக்க எதாவது வழி சொல்லுங்கள்!]"என வினவினார்கள்,
கண்மணியான நாயகம் ஸல்லல்லாஹுஅலைஹி வசல்லம் அவர்கள் "அபூஹுரைரா!உனது போர்வையை எடுத்து எனக்கு முன்பாக விரி"என்றார்கள்,
அபூஹுரைரா[ரழி]அவர்களும் அவ்வாறே செய்தார்கள்,
நபியவர்கள் எதையோ அள்ளி போடுவதை போல தன் இரு கைகளாலும் சாடை செய்துவிட்டு "அபூஹுரைரா!அந்த துணியை சுருட்டி எடுத்து உன் நெஞ்சோடு அணைத்துக்கொள்!"என்றார்கள் அபூ ஹுரைரா அவர்களும் அவ்வாறே செய்தார்கள்.
அபூ ஹுரைரா[ரழி]அவர்கள் கூறுகிறார்கள்:இந்த நிகழ்ச்சிக்குப்பின் நான் எதையும் மறக்கவே [மறதி என்னை விட்டும் அறவே நீங்கி விட்டது.][புகாரி,திர்மிதி,]
                                    ***********************
(3)நபி விரல் பட்ட மடுவில் பால் 
இப்னு மஸ்வூத்[ரழி]அவர்கள் கூறுகிறார்கள்:
இஸ்லாத்துக்கு முன்பு நான் உக்பா இப்னு அபீமுத்தீஃ என்பவரின் ஆடுகளை மேய்க்கும் அடிமையாக இருந்ததோடு வாலிபனாகவும் இருந்தேன்,
அப்போது ஒருமுறை காட்டில் ஆடு மேய்த்து கொண்டிருந்த போது நபி முஹம்மத்[ஸல்]அவர்களும் அபூபக்கரும் வந்தனர்,அவ்விருவரும் என்னிடம் "அருந்துவதற்கு பால் ஏதாவது உள்ளதா?"என்று வினவினர்,
நானோ இந்த ஆடுகளின் நம்பிக்கைக்குரிய மேய்ப்பாளன்தான் எனவே இதிலுருந்து பால் கறந்து தரும் உரிமை எனக்கு இல்லை எனறு கூற,இதனைக்கேட்ட நபியவர்கள் அப்படியென்றால் பால் கறக்கும் தகுதியற்ற ஆடு ஏதாவது இருந்தால் அழைத்து வாருங்கள்!என்று கூறினார்கள்,
அவ்வாறே நான் ஒரு குட்டி ஆடு ஒன்றை அழைத்து வந்து அன்னாருக்கு முன்பாக நிறுத்தினேன்
அதன் வளர்ச்சியடையாத மடுவை தன் கரத்தால் நபி தடவி கொடுக்க அது பால் சுரந்த மடுவாக பருத்துவிட்டது,அதிலிருந்து அன்னார் பால் கறக்க அதை நபியும்,அபூபக்கரும் அருந்தினர் நானும் அருந்தினேன் 
                                 ஆதாரம்:அஹ்மத்,பைஹகி,அபூதாவூத்
                                   ***********************
(4)பேரீத்தம் பழத்தில் பரகத்.
அபூஹுரைரா[ரழி]அவர்கள் கூறுகிறார்கள்:
ஒருமுறை சில பேரீத்தம் பழங்களை எடுத்து கொண்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தேன் "யாரசூலல்லாஹ்!இந்த பேரீத்தம் பழங்களில் அபிவிருத்தி[பரகத்]உண்டாக துஆ செய்யுங்கள்!"என வேண்டிக்கொண்டேன்,
நபியவர்கள் அதனை தன் கையில் வாங்கி துஆ செய்து விட்டு என்னிடம் கொடுத்து "அபூஹுரைரா!இதை ஒரு பையில் போட்டு வைத்துக்கொள்!எப்போது தேவைப்பட்டாலும் அதில் கையை விட்டு எடுத்து சாப்பிட்டு கொள்!ஆனால் அதை திறந்து விடாதே!"என்று நபி கூறினார்கள்,
நான் அதை எத்தனையோ போர்களங்களுக்கு கொண்டு போய் அதிலிருந்து எடுத்து [எல்லோரும்]சாப்பிடுவோம்,அதை என்னோடு எப்போவுமே கூடவே இடுப்பில் வைத்திருப்பேன்,[தேவைப்படும்போது அதிலிருந்து எடுத்து சாப்பிட்டு கொள்வேன்,ஆனால் அது காலியாகவே இல்லை]கடைசியில் உஸ்மான்[ரழி]அவர்கள் கொல்லப்பட்ட அந்த[கலவரமான]நாளில் அது காணமல் போய்விட்டது.
                                                                                                     ஆதாரம்:திர்மிதி,அஹ்மத்.
                                       *********************
(5)குணமடைந்த படுகாயம் 
யஸீத் இப்னு அபீஉபைத் அவர்கள் அறிவிக்கிறார்கள்:
ஸலமத் இப்னு அக்வஃ[ரழி]அவர்களின் கெண்டைக்காலில் பெரும் வெட்டுக்காயத்தின் அடையாளத்தை நான் கண்டு இது என்னவென்று கேட்டேன்,அதற்கு அவர்கள்:இது ஃகைபர் போரில் ஏற்பட்டது,இந்த காயத்தை கண்ட மக்கள் அப்போது சலமா இறந்து விட்டார்[இனி பிழைக்க மாட்டார்]என்றே பேசிக்கொண்டனர்,
நான் [இந்த காயத்தோடு] நபியிடம் வந்தேன்,நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த காயத்தின் மீது மூன்று முறை ஊதினார்கள் அப்போது நின்ற வலிதான் இது வரை அங்கு வலி ஏற்படவே இல்லை. [ஆதாரம்:புகாரி,அஹ்மத்,அபூதாவூத்,]
                                     *********************