Jul 22, 2011


வெள்ளி, 22 ஜூலை, 2011

நோன்பு கடமை,ஈகைப் பெரு நாள்


ஈகைத் திருநாள் எந்த அடிப்படையில் கொண்டாடப்படுகிறது? இந்தத் திருநாளின் மகிழ்ச்சி எதைக் குறிக்கிறது? ஏதோ ஒரு நாட்டில் யாரோ ஒரு மன்னன் வெற்றிக் கொடியை நாட்டிவிட்ட மகிழ்ச்சியை இந்நாள் குறிக்கிறதா? செழிப்பைக் குறிக்கும் பருவ மாற்றத்திற்காக இந்தப் பாங்கான பெருநாளைக் கொண்டாடுகிறோமா? அல்லது எவரேனும் ஒரு பெரியவரின் பிறந்த நாளை பசுமையாக நினைவில் பதிக்கும் பெருவிழாவா?
இல்லை... இல்லை..!

இவற்றில் எந்தவொன்றும் பெருநாள் மகிழ்ச்சிக்குக் காரணமாய் இல்லை. அதன் அடிப்படை இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டது. அது என்ன?
மனித இனம் இறைவனின் வழிகாட்டுதலுக்காக ஏங்கி நின்றது. அகிலத்தைப் படைத்த இறைவன், தன்னுடைய கரு ணையினால் அந்த ஒளிமிக்க வழிகாட்டுதலை வழங்கினான். ஆம்... வான்மறை குர்ஆன் அருளப்பட்டதாலேயே இந்த ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்கிறோம்; இறை தியானத்தில் மூழ்கியிருக்கிறோம்.

தன் வழிகாட்டுதலை வழங்கிய இறைவன், அதைப் பின்பற்றும் நற்பேறையும் வழங்கினான். ரமலானின் பயிற்சியால் அந்த வழிகாட்டுதலைப் பேணிக் காக்கும் ஆற்றலை இன்னும் அதிகமாக அருளினான். எனவே இந்த ஈகைப் பெரு நாள் அந்த ஏக இறைவனின் பெருமையைப் பாடும் பெருநாளாகவும், நம்முடைய நன்றியைத் தெரியப்படுத்தும் திரு நாளாகவும் திகழ்கிறது.

‘பெருநாளன்று மகிழ்ச்சியை வெளிப்படுத்துங்கள்’ என்று அண்ணல் நபியவர்கள் கூறியுள்ளார்கள். ‘இன்று உண் பதற்கும் பருகுவதற்கும் உரிய நாளாகும். ஒன்றுசேர்ந்து மகிழ்ச்சி கொண்டாடுவதன் மூலம் இன்பத்தைப் பெறுகின்ற நாள்; மேலும் இறைவனை நினைவுகூரும் நாள்.’

பெருநாளன்று குளித்துத் தூய்மையாகி நல்ல ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள். புத்தாடை அணிந்து நறுமணம் பூசிக்கொள்ளுங்கள்.

அனுமதிக்கப்பட்ட விளையாட்டுகளை விளையாட பிள்ளைகளை அனுமதியுங்கள். முடிந்தால் வெளியில் அழைத்துச் சென்று மகிழ்ச்சியாக இருங்கள்.
அன்னை ஆயிஷா அவர்கள் கூறுகிறார்கள். ‘பெருநாளன்று சில சிறுமிகள் கூட்டமாக அமர்ந்து சில பாடல்கள் பாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வருகை தந்த அபூபக்கர் அவர்கள், ‘இறைத் தூதரின் வீட்டில் பாட்டுக் கச்சேரியா?’ என்று அவர்களை அதட்டினார்கள்.

உடனே நபியவர்கள் கூறினார்கள்: ‘அபூபக்கரே, அவர்களைப் பாடவிடுங்கள். ஒவ்வொரு சமுதாயத்துக்கும் மகிழ்ச்சியான பெருநாட்கள் இருக்கின்றன. இன்று நம்முடைய பெருநாள் அல்லவா?’

பெருநாளன்று அபிசீனியாவைச் சேர்ந்த கலைஞர்கள் சிலர் வீர விளையாட்டுகளை நடத்திக் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். அண்ணல் நபியவர்கள் தாமும் அதைப் பார்த்து ரசித்ததுடன், தம் துணைவியார் ஆயிஷா அவர்களையும் தம் பின்னால் நிற்க வைத்து அதைக் காட்டினார்கள். அதுமட்டுல்ல, அந்த அபிசீனிய கலைஞர்களை அழைத்துப் பாராட்டவும் செய்தார்கள். (ஆதாரம்: புகாரி)

மகிழ்ச்சி கொண்டாட வேண்டும் என்பதற்காக ஒழுங்குமுறைகளை ஒருபோதும் மீறிவிடக் கூடாது. மகிழ்ச்சியை வெளிப்படுத்துங்கள்; ஆனால் அது எந்நிலையிலும் வரம்பு மீறாமலும் நடுநிலை தவறாமலும் இருக்க வேண்டும். ஹராமான தடுக்கப்பட்ட வழிகளில் சென்று மகிழ்ச்சி கொண்டாட நினைக்காதீர்கள்.

திருக்குர்ஆன் எச்சரிக்கிறது:

‘மேலும் இறைவன் உங்களுக்கு வழங்கியிருப்பவற்றைக் கொண்டு நீங்கள் பூரித்துப்போய்விடக் கூடாது. தம்மையே பெரிதாக நினைக்கின்ற, பெருமை பேசித் திரிகின்ற யாரையும் இறைவன் நேசிப்பதில்லை.’ (குர்ஆன் 57: 23)

பெருநாளன்று சிறப்புத் தொழுகைக்குச் செல்வதற்கு முன்னால் ஃபித்ரா எனும் பெருநாள் தர்மத்தைக் கட்டாயம் வழங்கிவிடுங்கள். தேவையுடையோரும் வசதியற்றோரும் பெருநாள் மகிழ்ச்சியில் பங்குகொள்ள அது பெரிதும் உதவும்.

அண்ணல் நபியவர்கள் கட்டளையிட்டார்கள். ‘பெருநாள் தர்மம் என் சமுதாயத்தினர் மீது கட்டாயமாக்கப்பட்டுள் ளது. இதனால் நோன்பின்போது ஏதேனும் குறைபாடு ஏற்பட்டிருந்தால் அதற்குப் பரிகாரமாகவும், ஏழை, எளியோரின் பசியைப் போக்கவும் இது துணை செய்யும்.’ (ஆதாரம்: அபூதாவூத்)

பெருநாள் தொழுகையை ஈத்கா என்று அழைக்கப்படுகின்ற திறந்தவெளி திடலில் நிறைவேற்றுவது சிறப்புக்குரியதாகும். தொழுகைக்குப் பிறகு ‘துஆ’ எனும் இறைவேட்டல் மிக உருக்கமாக நடைபெறும்.

நமக்காக, நமது குடும்பத்திற்காக, நமது ஊருக்காக, நம் நாட்டின் நலனுக்காக, உலக அமைதிக்காக, மறுமை வெற்றிக்காக என்று மிக உருக்கமாகப் பிரார்த்தனை செய்யப்படும். அதற்குப் பிறகு ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி பெருநாள் மகிழ்ச்சியையும் வாழ்த்து களையும் பரிமாறிக் கொள்வார்கள்.
எல்லோருக்கும் ஈகைத் திருநாள் வாழ்த்துகள்.

ரமலான் தகவல்கள்

அரபு மாதங்களில் ஒன்பதாவது மாதம் ரமலான். இந்த மாதத்தில்தான் முஸ்லிம்கள் அனைவரும் புனித நோன்பை நிறைவேற்றுகிறார்கள்.

ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டுதான் நோன்பு கடமையாக்கப்பட்டது.

நபிகள் நாயகம் அவர்களுக்கு முன்னர் வருகை தந்த இறை தூதர்களின் சமுதாயங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டிருந்தது.

வயது வந்த அனைவர் மீதும் நோன்பு கடமையாகும். நோயாளிகளுக்கும் பயணத்தில் இருப்பவர்களுக்கும் விலக்கு உண்டு.

புனித ரமலான் மாதத்தின் உயர்தனிச் சிறப்பு என்னவெனில், இந்த மாதத்தின் ஓர் இரவில்தான் திருக்குர்ஆன் அருளப்பட்டது.

திருக்குர்ஆன் அருளப்பட்ட அந்தப் புனித இரவு ‘லைலத்துல் கத்ர்’ (மாட்சிமை மிக்க இரவு) என்று அழைக்கப்படுகிறது.

ஹிரா எனும் குகையில் நபிகள் நாயகம் அவர்கள் தனிமையில் இறை தியானத்தில் மூழ்கியிருந்தபோது, அவர் முன் வானவர் ஜிப்ரீல் தோன்றி குர்ஆன் வேதத்தை அருளிச் செய்தார்.

அறிவுத் தேடலுக்கும், மெய்ஞானத்திற்கும் ஊக்கமளிக்கும் வகையில் திருக்குர்ஆனின் முதல் வசனம் ‘ஓதுவீராக...’ என்றே அருளப்பட்டது.

இந்த மாதம் முழுவதும் தராவீஹ் எனும் சிறப்புத்தொழுகை நடைபெறும். அதில் குர்ஆன் முழு மையாக ஓதி முடிக்கப்படும்.

திருக்குர்ஆனில் முப்பது பாகங்களும், 114 அத்தியாயங்களும், 6666 வசனங்களும் உள்ளன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாகம் என்று ஓதப்படும்.

இந்த மாதத்தில் செய்யப்படும் நற்செயலுக்குப் பல மடங்கு நற்கூலி வழங்கப்படும் என்று நபிகளார் அறிவித்துள்ளார்.

தூய ரமலானில் வசதி படைத்தவர்கள் ஜகாத் எனும் கட்டாய தர்மத்தை எளியோர்க்கு வழங்கு கிறார்கள். ஒருவருடைய வருமானத்தில் செலவுகள் எல்லாம் போக ஒரு குறிப்பிட்ட தொகை மீதம் இருக்குமாயின், அந்தத் தொகையில் இரண்டரை சதவீதம் ஜகாத் கடமையாகும்.

வசதி இருந்தும் ஜகாத் கொடுக்காதவர்களுக்கு மறுமையில் கடும் தண்டனை காத்தி ருக்கிறது என்று குர்ஆன் எச்சரிக்கிறது.

ரமலானின் கடைசி பத்து நாட்களில் ‘இஃதிகாப்’ எனும் உயர் ஆன்மிக வழிபாடு பேணப்படுகிறது.

வீடு, தொழில், மனைவி, மக்கள் என உலகியல் காரியங்களிலிருந்து முற்றாக ஒதுங்கி, பத்து நாட்களும் பள்ளிவாசலிலேயே முழுமையாகத் தங்கி இறைவனை வழிபடுவதற்குப் பெயர்தான் இஃதிகாப்.

ரமலான் மாதம் முடிந்து ஷவ்வால் மாதத்தின் முதல்நாள் ஈகைத் திருநாள் கொண்டாடப்படுகிறது.

பெருநாளன்று சிறப்புத் தொழுகைக்குச் செல்வதற்கு முன்பாக ‘ஃபித்ரா’ எனும் பெருநாள் தர்மத்தை ஏழைகளுக்கு வழங்கிடல் வேண்டும்.