Aug 28, 2010

ரமழானில் குர்ஆனும் நாமும்

Saturday, 22 August 2009 06:21

அபூ முஆத்

நாம் ஷஹ்ரு ரமழானை அடைந்துள்ளோம். ரமழானை குர்ஆனுடைய மாதமெனக் கூறுவர். இந்த மாதத்தில்தான் முதன் முதல் அல்குர்ஆன் இறங்கியது. இந்த மாதத்தில் நபி (ஸல்) அவர்களும் ஜிப்ரீல் (அலை) அவர்களும் அல்குர்ஆனை ஓதியும் ஓதிக் காட்டியும் வந்திருக்கிறார்கள். நன்மை கருதி இம்மாதத்தில் முஸ்லிம்கள் அல்குர்ஆனை அதிகமாக ஓதி வருவார்கள். பள்ளிவாசல்களில் தராவீஹ் தொழுகையின்போதும் ஹிஸ்பு மஜ்லிஸ்களிலும் அல்குர்ஆன் ஓதப்பட்டு வருகின்றது.

முஸ்லிம்கள் அல்குர்ஆனை ஐந்து கோணங்களில் அணுக வேண்டியுள்ளது. முதலாவது,அல்குர்ஆன் அல்லாஹ்வினால் அருளப்பட்ட வேதம் என நம்புவதாகும். அது மனித சமுதாயத்துக்கு வழிகாட்டியாக அருளப்பட்ட அல்லாஹ்வின் கலாம் என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். அந்தவகையில் அவன் அல்குர்ஆனை கண்ணியப்படுத்துகிறான். அதனை சுத்தமான நிலையில் தொடுகிறான். வுழூவுடன் ஓதுகிறான். அல்குர்ஆனை அல்லது அதன் வாசகங்கள் எழுதப்பட்ட பிரதிகளை கீழே விழாமல் பாதுகாக்கிறான். விழுந்தாலும் உடனடியாக அதனை எடுத்து முத்தமிட்டு கண்ணியமாக மேலே வைக்கிறான்.

உமர் (ரழி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்கு முன், அவரது தங்கையின் கையிலிருந்த குர்ஆன் ஆயத்துகள் அடங்கிய பிரதியை கேட்டபோது, அதனை அவரிடம் கொடுக்க விரும்பவில்லை. சுத்தம் செய்து வந்த பின்பே அதனைக் கையளித்தார்கள். இது அல்குர்ஆனுக்குக் கொடுத்த கௌரவமாகும்.

இரண்டாவது அல்குர்ஆன் ஓதப்படுவதை செவிமடுப்பதாகும். அல்குர்ஆன் ஓதப்படுமிடங்களில் அமைதிகாத்து அதனைச் செவிமடுக்க வேண்டும். ஓதுபவருக்கு நன்மை கிடைப்பது போலவே கேட்பவருக்கும் நன்மை உண்டு. நபி (ஸல்) அவர்கள் கூட அல்குர்ஆனை ஸஹாபாக்கள் ஓதுவதைக் கேட்டு மகிழ்ந்துள்ளார்கள். தாம் கேட்க வேண்டும் என்பதற்காக ஸஹாபாக்களை ஓத வைத்திருக்கிறார்கள். நான் பிறர் அதனை ஓதுவதைக் கேட்பதற்கு விரும்புகிறேன் எனக் கூறிய நபி (ஸல்) அவர்கள், இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்களை ஓதுமாறு கேட்டு, செவிமடுத்துள்ளார்கள். அபூ மூஸா அல் அஷ்அரி (ரழி) அவர்கள் இரவில் ஓதுவதை நபி (ஸல்) அவர்கள் மறைந்திருந்து கேட்டிருக்கிறார்கள். ஸாலிம் மௌலா, அபூ ஹூதைபா (ரழி) அல்குர்ஆன் ஓதுவதை நபி (ஸல்) அவர்கள், ஆயிஷா (ரழி) அவர்களுடன் சேர்ந்து கேட்டிருக்கிறார்கள்.

அல்குர்ஆனை ஓதக் கேட்பவருக்கு அது மறுமையில் ஒளியாக அமையுமெனக் கூறி தூண்டியிருக்கிறார்கள். ஆதலால் வழமையை விட இம்மாதத்தில் அல்குர்ஆன் ஓதப்படுவதை அதிகமாகக் கேட்க வேண்டும். தனிநபர்கள் ஓதுவதையோ, மின்னியல் ஊடகங்களூடாக ஓதப்படுவதையோ கேட்பதில் ஆர்வம் காட்ட வேண்டும்.

மூன்றாவது, அல்குஆனை நாம் ஓதிவர வேண்டும். ஓதத் தெரியாதவர்கள் ஓதத் தெரிந்தவர்கள் ஓதுவதை செவியேற்பதோடு திக்கித் திக்கியாவது ஓத முயற்சிக்க வேண்டும். அதற்கும் நன்மை உண்டென நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.அல்குர்ஆனை ஓதுங்கள். அது மறுமையில் ஓதியவருக்குப் பரிந்து பேசும்என ஹதீஸ்கள் குறிப்பிடுகின்றன. அல்குர்ஆனை ஓதும்போது அமைதியாக உரிய முறையில் உச்சரித்து ஒழுங்கு முறையில் ஓதி வர வேண்டும். அபூபக்ர் (ரழி) அவர்கள் தமக்கு மட்டும் கேட்குமாறு தாழ்ந்த குரலில் ஓதுவார்கள். உமர் (ரழி) அவர்கள் பிறருக்குக் கேட்குமாறு உரத்த குரலில் ஓதுவார்கள். எனவே, இரு விதமாகவும் ஓதலாம். ஒருவர் அல்குர்ஆனை அவசரமாக ஓதுவதைக் கேட்ட ஆயிஷா (ரழி) அவர்கள், அவர் குர்ஆனை ஓதவுமில்லை; அமைதியாக இருக்கவுமில்லை என்றார்கள்.

அல்குர்ஆனை ஓதும்போது அது தனக்கு அருளப்பட்டது போன்ற உணர்வுடன் ஓதவேண்டும். அல்குர்ஆனை ஓதும்போது அழுது கண்ணீர் வடியுங்கள்; முடியாது போனால் அழுவதுபோன்று பாவனை செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அல்லாஹ்வின் வேதனை பற்றிய ஆயத்துக்களை ஓதும்போது பயத்தினாலும் அல்லாஹ்வின் அருள் பற்றிய ஆயத்துக்களை ஓதும்போது ஆனந்தத்தாலும் கண்ணீர் வடிக்கலாம். நபி (ஸல்) அவர்கள் அல்குர்ஆனை ஓதும்போது,கண்கள் கண்ணீர் வடித்ததாகவும் உரோமங்கள் புல்லரித்ததாகவும் அல்லாஹ்வின் பயத்தினால் உள்ளம் நடுங்கியதாகவும் அஸ்மா (ரழி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த உணர்வுடன் அல்குர்ஆனை ஓத நாமும் முயற்சிக்க வேண்டும்.

அல்குர்ஆனை மனனமாக ஓதுவதை விட பார்த்து ஓதுவது சிறப்பானதென இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அல்குர்ஆன் பிரதியை சுமத்தல்,அதனைப் பார்த்தல், அதன் கருத்தை சிந்தித்தல் போன்றவற்றுக்கான வாய்ப்புக்கள் அதன்போது அதிகமாக உள்ளன. சிந்தித்து ஓத வேண்டும் என்பதற்காகத்தான், அவசரமாக ஓதுவதைக் கண்டித்து நபி (ஸல்) அவர்கள், மூன்று நாட்களுக்குக் குறைவான காலப் பிரிவில் குர்ஆனை ஓதி முடிப்பவர் அதனை விளங்கிவில்லை என எச்சரித்தார்கள். அறபு மொழியை விளங்காதவர்கள் மொழிபெயர்ப்பொன்றை உடன் வைத்துக் கொள்வது பயனாக இருக்கும்.

நான்காவது, அல்குர்ஆனை விளங்குவதாகும். அல்குர்ஆன் ஓதுவதற்காக மட்டும் அருளப்பட்ட வேத நூலல்ல. திலாவதுல் குர்ஆனுடன் தப்ஹீமுல் குர்ஆனும் இடம்பெற வேண்டும். எனவேதான், அல்குர்ஆனை பார்த்து ஓதுவது சிலாகித்துக் கூறப்பட்டது. முதலாவது அருளப்பட்ட வசனம் உத்லுமா ஊஹிய இலைக்க (உமக்கு வஹி மூலம் அருளப்பட்டதை ஓதுவீராக)என்று அமையாமல் இக்ரஉ பிஸ்மி ரப்பிகல்லதீ கலக் (உம்மைப் படைத்த இறைவனின் பெயரால் வாசிப்பீராக)என்று அருளப்பட்டதை சிந்தனையோடு நோக்க வேண்டும். வாசிப்பீராக (இக்ரஉ) என்ற சொற்பிரயோகம் வாசித்து விளங்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

இதனைத்தான் மௌலானா முஹம்மதலி ஜவ்ஹர் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்கள். நான் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றவன். என்றாலும் அல்குர்ஆனை பொருளுடன் ஓதி உணர்ந்த நாளே நான் உண்மையாகக் கல்வி கற்ற நாளாகும்.ஆகவே அல்குர்ஆனை விளங்கும் மாதமாகவும் இம்மாதத்தை ஆக்கிக் கொள்ள வேண்டும். பல்வேறு மொழிகளிலுள்ள தர்ஜுமாக்களையும் தப்ஸீர்களையும் வாசிக்கலாம். அல்லது கூட்டாக அல்குர்ஆன் விளக்க வகுப்புக்களை நடத்தலாம்.

இவ்வாறு அல்குர்ஆனை விளங்கிய மக்கள் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். இது ஐந்தாவது பணியாகும். ஸமிஃனா வஅதஃனா கேட்டோம்; வழிப்பட்டோம்என்ற அல்குர்ஆனின் பிரயோகம் இதனைச் சுட்டிக் காட்டுகின்றது. ஒரு நாட்டுப்புற அறபி,அல்குர்ஆனின் சிறிய ஸூறாக்களை கற்றுக் கொண்டபோது, ஸூறா ஸில்ஸாலின் கடைசி ஆயத்தை ஓதக் கேட்டார். பின்னர், அதுவொன்றே தனக்குப் போதும் எனக் கூறி செயல்படுவதாக வாக்குறுதியளித்துச் சென்றார். ஸஹாபாக்கள் அல்குர்ஆனின் பத்து ஆயத்துகளைக் கற்று அதனை செயல்படுத்திய பின்பே அடுத்த ஆயத்துக்களைக் கற்றுக் கொண்டதாக குறிப்புக்கள் காணப்படுகின்றன. இதனால்தான் ஸஹாபா சமூகத்தை அல்குர்ஆனிய சமூகம் என பாராட்டுவர். ஆதலால் நாமும் அல்குர்ஆனைக் கற்று அதனை நடைமுறைப்படுத்துபவர்களாக மாற வேண்டும்.

இவ்வனைத்துப் பணிகளும் ரமழானுடன் சுருங்கி விடுவனவல்ல. முஸ்லிமுடைய வாழ்வு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியன. இதற்கான பயிற்சியை ரமழானில் பெற்றுக் கொள்வோம்.