Jan 18, 2011

அன்சாரிகள் (மதீனாவாசிகள்) மீது எம்பெருமானார்

ஹுனைன் யுத்தத்தில் கிடைத்த போர் பொருட்களை மிக அதிகமாக இஸ்லாத்தில் இணைவதற்காகவும், இஸ்லாத்தில் இணைந்த புதிய முஸ்லிம்களுமான குரைஷி மக்களுக்கு சூரத்து தவ்பாவின் 60வது வசனத்திற்கு ஒப்ப அல்லாஹுடைய தூதர் அவர்கள் பிரித்துக் கொடுத்தார்கள். ஆனால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அன்சாரிகளுக்கு 4 ஒட்டகங்கள் அல்லது அதற்கு சமமான ஆடுகள் கொடுக்கப்பட்டன. இதனால் அன்சாரி ஸஹாபிகள் மிகுந்த மன வேதனையடைந்தார்கள். “யுத்தங்கள் ஏற்படும் போது நாம்தான் அவரது தோழர்கள். யுத்தப் பொருட்களை பகிர்ந்தளிக்கும் பொழுது அவரது குடும்பத்தினரும் அவரது மக்களும் ஆவார். இது அல்லாஹ்வின் கட்டளையாக இருந்தால் நாம் ஏற்றுக் கொள்வோம், அது அல்லாது இது தூதருடைய உள்ளத்தில் எழுந்த எண்ணமாக இருந்தால், நமக்கும் சலுகை செய்யுமாறு நாம் அவரை வேண்டுவோம்” என்றனர் அன்ஸாரிகள்.இதை அன்ஸாரிகளின் பிரதிநிதியான ஸஅத் இப்னு உபாதா (ரழி) அவர்கள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றார்கள். இதை கேட்ட நபி (ஸல்) “ஸஅதே! இந்த விடயத்தில் உங்கள் நிலை என்ன? என கேட்டப் பொழுது, அதற்கு ஸஅத் (ரழி) அவர்கள், நானும் அன்ஸாரிகளின் கருத்துடன் ஒத்து இருக்கிறேன்” என சொன்னார்கள். அதை கேட்ட முஹம்மது (ஸல்) அவர்கள் அவர்களை கைதிகளை அடைத்து வைத்திருந்த இடத்தில் அன்ஸாரிகளை ஒன்று கூட்டினார்கள்.


அவர்களிடம் வந்த நபி (ஸல்) அவர்கள், ஓ! அன்ஸாரிகளே! எனக்கெதிரான எண்ணங்கள் உங்கள் உள்ளங்களில் எழுந்துள்ளன என்பதை நான் அறிகிறேன் என்றவர்கள். உங்களை நான் தவறியவர்களாகக் கண்ட போது இறைவன் உங்களுக்கு நேர்வழி காட்டவில்லையா? நீங்கள் ஏழைகளை இருந்தப் பொழுது இறைவன் உங்களை செல்வந்தராக்கவில்லையா? நீங்கள் ஒருவருக்கு ஒருவர் பகைமை பாராட்டியவர்களாக இருந்த உங்களை அல்லாஹ் உங்கள் இதய்ங்களை ஒன்றுபடுத்தவில்லையா? என கேட்டதும், அங்கு குழுமி இருந்த அன்ஸாரிகள். நிச்சயமாக அவ்வாறே! அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அன்பும் கருணையும் மிக்கவர்கள் என்றார்கள்.

அதை தொடர்ந்து அல்லாஹுடைய தூதர் கண்ணியமிக்க முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அன்ஸாரிகளை பார்த்து, என்னை எதிர்த்து பேசமாட்டீர்களா? என கேட்டார்கள். அதைக் கேட்டதும் அன்ஸாரிகள் கலக்கமுற்றனர். உங்களை எதிர்த்து நாங்கள் எப்படி பேச முடியும்? என்றார்கள்.

அதை கேட்ட நாயகம் (ஸல்) அவர்கள், நிச்சயமாக நீங்கள் விரும்பினால் உண்மையாகவே என்னைப் பார்த்து நீங்கள் இவ்வாறு கேட்கலாம்? அவமதிக்கப்பட்டவராக நீர் எங்களை வந்து சேர்ந்தீர், நாங்கள் உம்மை கவுரவித்தோம். துணையின்றி தனித்தவராக நீர் வந்தீர், நாங்கள் உமக்கு உதவி செய்தோம். வெளியேற்றப்பட்டவராக நீர் வந்தீர், நாம் உமக்கு அடைக்கலம் தந்தோம். நாம் உமக்கு ஆறுதல் தந்தோம் என நீங்கள் கேட்கலாம்.

மேலும் தொடர்ந்த அல்லாஹுடைய தூதர் அவர்கள், “ஓ! அன்ஸாரிகளே! நான் உங்களை உங்களது இஸ்லாத்தின் பொறுப்பில் விட்டுள்ள நிலையில், அல்லாஹ்வை அடிபணிய அவர்களது உள்ளங்களை இணங்கச் செய்யப் பயன்படுத்திய இவ்வுலகத்தின் அற்பப் பொருட்களுக்காக உங்கள் உள்ளங்கள் சஞ்சலப்படுகிறதா?

ஓ! அன்ஸாரிகளே! மக்கள் ஒட்டகங்களையும், செம்மறி ஆடுகளையும் அவர்களது வீட்டிற்கு எடுத்துச் செல்ல, நீங்கள் உங்கள் வீட்டிற்கு அல்லாஹ்வையும் அவனது தூதரையும் எடுத்துச் செல்வதில் திருப்தி இல்லையா? அன்ஸார்கள் ஒரு வழியிலும், மற்றவர்கள் வேறு ஒரு வழியிலும் சென்றால், உங்கள் நபியாகிய நான் அன்ஸாரிக்ள் செல்லும் வழியில்தான் செல்வேன். அன்ஸாரிகள் மீதும், அன்ஸாரிகள் மக்கள் மீதும், அவர்களது மக்களின் மக்கள் மீதும் அல்லாஹ் அருள் பாலிப்பானாக! என துஆச் செய்ததும், அங்கு கூடி இருந்த அன்ஸாரி ஸஹாபிகள் தம் தாடிகள் நனையும் வரை கண்ணீர் விட்டு அழுதார்கள்.

எங்களது பங்காகவும், எமது உடமையாகவும் அல்லாஹ்வின் தூதரைப் பெற்றுக் கொள்வதில் நாம் முழு திருப்தி கொள்கிறோம் என்றார்கள்.