ஒரு நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பணக்காரன் முதல் பணக்காரனைப் பார்த்து அவனைப் போல நாம் இல்லையே என்று கவலை கொள்ளுகிறான். அவனுக்கு எல்லா வசதிகளும் இருக்கின்றன. அவன் நினைத்தால் பணத்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம். ஆனாலும் அவனுக்கும் ஒரு கவலை இருக்கத்தான் செய்கிறது. ஒரு நாட்டின் முதல் பணக்காரனோ உலகத்தின் முதல் பணக்காரனைப் பார்த்து கவலைப்படுகிறான். அவனைப் போல நாம் இருந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்க்கிறான். உலகின் முதல் பணக்காரன் தான் இரண்டாவது பணக்காரனாகிவிட்டால் என்ன செய்வது என்று கவலையுடனும் பயத்துடனும் நாட்களைக் கழிக்கிறான். ஆக ஏழையானாலும் சரி பணக்காரனானாலும் சரி ஒருவர் மற்றவரைப் பார்த்து அவரைப் போல நாம் இல்லையே என்று கவலைப்படுவது மனித வாழ்க்கையில் இயல்பாகிப் போய்விட்டது.
இயற்கை எப்போதும் மாறாத தன்மையுடன் விளங்குவதாலேயே அது இன்றுவரை பழமையும் பெருமையும் மாறாமல் தலைநிமிர்ந்து நிற்கிறது. இயற்கையைப் போலவே விலங்குகளும் இயல்பான வாழ்க்கை வாழ்கின்றன. சிங்கம் புலியைப் போல வாழ எண்ணுவதில்லை. புலி யானையைப் போல வாழ எண்ணுவதில்லை. ஒருவர் பிறரைப் போல வாழ முயற்சிக்கும் போது பிரச்சினைகள் தோன்றுகின்றன. இதனாலேயே மனிதன் ஏராளமான பிரச்சினைகளைச் சந்திக்கிறான். விலங்குகள் பெரிய பிரச்சனைகள் ஏதுமின்றி இயல்பாக வாழ்க்கையை நடத்துகின்றன.
காட்டில் வசித்து வந்த ஒரு பூனைக்கு ஒருநாள் அந்த எண்ணம் தோன்றியது.
‘நாமும் பார்ப்பதற்கு புலி போலத்தானே இருக்கிறோம்? என்ன உருவத்தில் கொஞ்சம் சிறியதாக இருக்கிறோம். ஆனால் நம்மைப் பார்த்து ஏன் மற்றவர்கள் பயப்படமாட்டேன் என்கிறார்கள்? புலியைப் போல நாமும் மற்றவரை உறுமி மிரட்டிப் பார்த்தால் என்ன?’
இந்த எண்ணத்தை உடனே செயல்படுத்தியது.
சற்று தொலைவில் ஒரு மான் மேய்ந்து கொண்டிருந்தததைப் பார்த்து அதன் அருகே போனது பூனை. பூனையைப் பார்த்துவிட்டு மீண்டும் புல்லை மேயத்தொடங்கியது மான்.
பூனை இப்போது கோபத்துடன் உறுமி குரல் கொடுத்துவிட்டு மானைப் பார்த்துப் பேசியது.
“ஏய். எவ்வளவு தைரியம் இருந்தா என்னைப் பார்த்து பயப்படாம புல் மேயற. நானும் புலியைப் போலத்தான். நீ எனக்கு பயந்தாகணும்”
இதைக் கேட்ட மான் கிண்டலாய் சிரித்தது.
“எங்கே புலியைப் போல என்னைத் துரத்திப் பிடியேன் பார்க்கலாம்”
இப்படிச் சொன்ன மான் ஓடத்தொடங்கியது. பூனை அதைத் துரத்தியது. ஆனால் வேகமாக ஓடும் மானைத் துரத்திக் கொண்டு ஓட பூனையால் முடியவில்லை. பூனை மூச்சு வாங்கி பாதியிலேயே நின்று விட்டது.
அடுத்தநாள் காட்டுப் பன்றி ஒன்றைப் பார்த்த பூனை அதனிடம் சென்று மானிடம் சொன்னது போலவே சொன்னது. இதைக் கேட்டு கோபமடைந்த காட்டுப்பன்றி பூனையைப் பிடித்து தூக்கி வீசியது. தொலைவில் போய் விழுந்த பூனைக்கு நல்ல காயம் ஏற்பட்டது. இப்போது அது யோசிக்க ஆரம்பித்தது.
‘யாரும் நமக்கு பயப்படுகிற மாதிரி இல்லை. எனவே வேறு வழியில்லை. இனி நம்மை நாம் மாற்றிக் கொண்டு எல்லோரிடமும் நல்ல பெயர் எடுக்கப் பார்க்கலாம்’
இவ்வாறு அது யோசித்துக் கொண்டிருந்த போது இரண்டு எலிகள் அந்தப் பக்கம் சென்றன. பூனையைப் பார்த்து பயந்து ஓட எத்தனித்த அந்த எலிகளைப் பூனை கூப்பிட்டது.
“நண்பர்களே. என்னைப் பார்த்து இனி நீங்கள் ஓடத் தேவையில்லை. இன்றிலிருந்து நான் உங்களைப் பிடித்து சாப்பிடப் போவதில்லை. சுத்த சைவமாக மாறிவிட்டேன். என்னை நம்புங்கள்”
பூனை சொன்னதைக் கேட்ட எலிகள் பூனையை நம்பின. பூனை அதனிடம் அன்பாகப் பழகியது. அது சுத்த சைவமாக மாறி கிழங்குகளை மட்டுமே சாப்பிடத் தொடங்கியது.
எலிகள் பூனையிடம் இப்போது மிகவும் சகஜமாக விளையாடின. ஒரு எலி பூனையின் காதைப் பிடித்து இழுத்துப் பார்த்தது. பூனை தூங்கிய சமயத்தில் அதன் மீது குதித்து விளையாடின. விளையாட்டு எல்லை மீறி பூனை மிகவும் கஷ்டப்பட்டது. கிழங்குகளை மட்டுமே சாப்பிட்டதால் உடல் சோர்வடைந்தது.
பூனை இப்போது யோசித்தது.
“எல்லோரும் நமக்கு பயப்பட வேண்டும் என்று நினைத்தது வம்பில் முடிந்தது. எல்லோரிடமும் அன்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் தொல்லையாக இருக்கிறது. வேறு வழியில்லை. இனி நாம் நாமாக இருப்போம்”
இந்த முடிவிற்கு வந்த பூனை இப்போது கோபத்துடன் எலிகளைப் பார்த்து உறுமத் தொடங்கியது. பயந்து போன எலிகள் ஓடி மறைந்தன.
பூனை இப்போது பழையபடி நிம்மதியாக வாழத் தொடங்கியது.
அவரை மாதிரி நாம் இல்லையே என்று ஏங்குவதைப் போலவே அவரை விட நாம் எவ்வளவோ மேல் என்ற எண்ணமும் நமது வாழ்க்கையில் சில சந்தர்ப்பங்களில் தோன்றும். அது எப்போது என்றால் நாம் சிலருடைய வாழ்க்கையைப் பார்த்து அவரைப் போல வாழ்க்கை நமக்கிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்திருப்போம். ஆனால் அவர் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எதிர்பாராதவிதமாக பெரும் பிரச்சினையில் மாட்டிக்கொண்டு இழக்கக்கூடாததை எல்லாம் இழந்து தவித்து வேதனைப்படும் போது நமக்கு ‘அவரை விட நாம் எவ்வளவோ பரவாயில்லை’ என்ற எண்ணம் தோன்றும். உண்மையில் சொல்லப்போனால் மனிதனாய்ப் பிறந்த அனைவருக்கும் ஏதாவது ஒரு பிரச்சினையும் வேதனைகளும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. அது அவரவர் தகுதியையும் வாழ்க்கை முறையையும் பொறுத்தே அமைகிறது.
உலகப்புகழ் பெற்ற யேல் பல்கலைக்கழகத்திற்கு அண்ணாதுரை அழைக்கப்பட்டார். எப்போதும் போலவே மிகவும் எளிமையாக இயல்பாக அங்கே சென்றார். அவருடைய தோற்றத்தைக் கண்டோர் அவரை சாதாரணமாக நினைத்து விட்டார்கள். ஒரு மாணவன் அண்ணாதுரையை ஏளனமாக நினைத்து அவரிடம் because என்ற ஆங்கிலச்சொல்லை தொடர்ந்து மூன்று முறை வருமாறு அமைத்து ஒரு வாக்கியத்தைக் கூற முடியுமா என்று கேட்டான். அண்ணாதுரை யோசிக்கவே இல்லை. உடனே சர் sentence begins with because, because, because is a conjunction என்று பதிலுரைத்தார். இன்னொரு மாணவன் அண்ணாவிடம் அஆஇஈ என்ற எழுத்துக்களே இல்லாத நூறு வார்த்தைகளை உடனே கூற முடியுமா என்று கேட்டான். அண்ணா உடனே One to Ninety Nine என்று பதிலளித்தார். அண்ணாவின் அறிவைக் கண்டு பிரமித்துப்போனார்கள் பேராசிரியர்களும் மாணவர்களும். அண்ணாவை தங்கள் மனதில் சிம்மாசனமிட்டு அமர்த்திக் கொண்டார்கள். மற்றொரு முறை அண்ணா இராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்த அழைக்கப்பட்டிருந்தார். அக்கூட்டத்திற்கு தலைமை வகிக்க துணைவேந்தரை அழைத்தார்கள். அண்ணாவின் எளிய தோற்றத்தைக் கண்டு தவறாக எடைபோட்ட அந்தத் துணைவேந்தர் மறுத்தார். வேறொருவர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது, அந்தக் கூட்டத்தில் அண்ணா இரண்டு மணிநேரம் அழகான ஆங்கிலத்தில் உரையாற்றினார். அண்ணாவின் பேச்சை தனது அறையிலிருந்து கேட்ட அந்தத் துணைவேந்தர் உடனே மேடையேறி தான் இதுவரை இதுபோன்ற அற்புதமான பேச்சைக் கேட்டதில்லை என்று மனதாரப் பாராட்டினார்.
அண்ணா எப்போதும் இப்படித்தான். எளிமையான வாழ்க்கை. அவருக்கென்று ஒரு பாணி. அவர் எப்போதும் நம்பியது அவருடைய அறிவைத்தான். அதுதான் அவருக்கு உயர்வைத் தேடித்தந்தது. மிகப்பெரிய மனிதர்கள் எல்லாம் ஒருபோதும் அவரைப் போல நாம் இல்லையே என்று எண்ணி ஏங்குவதே இல்லை.
கடவுள் புழு பூச்சி முதல் மிகப்பெரிய யானை வரை அனைத்தையும் ஏதோ ஒரு காரணத்திற்காகவே படைத்திருக்கிறார் என்று திடமாக நம்புங்கள். அவரைப் போல நாம் இல்லையே என்று எண்ணி எண்ணி அற்புதமான வாழ்க்கையைத் தொலைக்காதீர்கள். இந்த பூமியில் பிறந்த ஒவ்வொருவரும் பாக்கியசாலிகள். அனைவருக்கும் திறமை இருக்கிறது. அனைவருக்கும் ஆற்றல் இருக்கிறது. அனைவருக்கும் சாதித்து உயரக்கூடிய தகுதி இருக்கிறது. அனைவருமே ஏதோ ஒரு வகையில் சிறந்தவர்கள்தான். இதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மிகப்பெரிய அந்தஸ்தில் உள்ளவர்கள் ஒரே நாளில் பிச்சைக்காரர்களைவிட மோசமான நிலைக்கு வருவதைப் பார்க்கிறோம். சில வருடங்களுக்கு முன்பு குஜராத் மாநிலத்தில் புஜ் என்ற இடத்தில் மிகமோசமான பூகம்பம் ஏற்பட்டபோது இந்த நிலை பலருக்கு ஏற்பட்டது. அடுத்தவேளை சாப்பாட்டிற்கே வழியில்லாதவர்கள் சிலர் எதிர்காலத்தில் மிகப்பெரிய பணக்காரர்களாய் ஆவதையும் நாம் பார்க்கிறோம். ஒரு ஏழை ஏழையாக இருக்கும்போதே பணக்காரனாய் தன்னை பாவித்து அவனைப் போலவே வாழ விரும்பும் போதுதான் பிரச்சினைகளும் சிக்கல்களும் தோன்றுகின்றன.
அவரைப் போல நாம் இல்லையே என்று கவலைப்படும் வழக்கத்தை நீங்கள் முதலில் கைவிடுங்கள். அவரைப் போல நாம் வாழ்க்கையில் உயர வேண்டும் என்று மட்டும் நினையுங்கள். சலிக்காது உழையுங்கள். வெற்றியும், நிம்மதியும், புகழும் உங்களைத் தேடி வரும். நாம் நாமாக இருப்போம். வெற்றிகளைக் குவித்து புதிதாய் பிறப்போம்
.