Aug 6, 2010

ரமளானே!வருக!!

மனிதனைப் படைத்த அல்லாஹ்,அவனது தேவையறிந்து பல படைப்புகளைப் படைத்திருப்பதை போல, அவனைத் திருத்தமுள்ள மனிதனாக வாழ்ந்து ஆன்மீக வாழ்விலும் வெற்றி பெற்றிட பல ஏற்பாடுகளை செய்திருக்கின்றான். தனது தூதர்களை அனுப்பியும், தனது வேதங்களை இறக்கியும், பல அற்புதங்களைக்காட்டியும், பல சோதனைகளின் மூலமும், இப்படி பல வகையான காரியங்களால், மனிதனை நேர் வழிக்கு கொண்டு வர கருணையுள்ள அல்லாஹ் வழிகளை உண்டாக்கியுள்ளான். இவ்வாறே, புனித நாட்கள் பலவற்றின் மூலமும், தனது நினைவுகளை அல்லாஹ் தன் அடியார்களின் உள்ளங்களில் பசுமையாக பதிய வைக்க முயற்சிக்கிறான். நம்மை எதிர் நோக்கி வரும் ரமளான் மாதமும் மனித உள்ளங்களில் நற்பண்புகளை விதைப்பதாகவே அமைந்துள்ளது. பொறுமை. நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள்,ரமளான் மாதம் துவங்குவதற்கு முன் ஒரு உபதேசம் செய்தார்கள், அந்த ஹதீஸின் தொடரில், இந்த மாதம் பொறுமையின் மாதம், பொறுமையின் கூலி சொர்க்கமாகும்.,என்று கூறினார்கள். இந்த வார்த்தை ,புனித ரமளான் மாதம் பொறுமையை போதிக்கிறது என்பதைக் காட்டுகிறது. பொதுவாக பசியென்பது கோபத்தை அதிகப்படுத்தும், அதே வேளை இந்த போதனை, முஃமினுக்கு அளிக்கப்படும் சிறந்த பயிற்சி எனலாம்.காரணம்;இன்றைக்கு ஏற்படும் ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கு பொறுமையின்மையே முக்கியமான காரணமாகக்கொள்ளலாம். சமாதான உலகை உருவாக்கும் இலட்சியம் கொண்ட இனிய மார்க்கமாகிய இஸ்லாம், அருள்மறை குர்'ஆன் "பொறுமையாளர்களுக்கு அவர்களின் கூலி கணக்கின்றி வழங்கப்படும்,"[39:10] என்று கூறுகிறது

1 comment:

  1. Inshaallah, everyone may seek patience (பொறுமை) as Hazrath said.

    ReplyDelete